அமெரிக்க வீதிகளில் பலூன் வணிகன் ஒருவன் பலூன்களில் காற்றடித்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் பல நிறங்களில் பலூன்கள் இருந்தன.
அவனிடமிருந்து சிகப்பு நிறப் பலூனை வாங்கிய ஒரு சிறுவன் அதை பறக்க விட்டான். அந்தப் பலூன் வெகு உயரத்திற்குப் பறந்து போய்க் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த இன்னொரு சிறுவன் மஞ்சள் நிறப் பலூன் ஒன்றை வாங்கிப் பறக்க விட்டான். அதுவும் வெகு உயரத்திற்குப் பறந்தது.
இப்படியே ஒவ்வொரு சிறுவர்களும் அவரவருக்குப் பிடித்த நிறத்தில் பலூனை வாங்கிப் பறக்க விட்டனர். மகிழ்ச்சி அடைந்தனர்.
பலூன்காரனிடம் இருந்த பலூன்களில் அனைத்து நிறமும் தீர்ந்து போய் விட்டது. கடைசியில் கறுப்பு நிற பலூன் மட்டும் யாரும் விரும்பிக் கேட்காததால் அவனிடம் அப்படியே இருந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நீக்ரோ இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் அந்த பலூனையும் பலூன்காரனையும் பார்த்தான்.
பலூன்காரன் அந்தச் சிறுவனை அருகில் அழைத்தான்.
அந்தக் கறுப்பு நிறப் பலூனில் காற்றடைத்து அவன் கையில் கொடுத்து, "இந்தப் பலூனிற்கு நீ பணம் கொடுக்க வேண்டாம். நீ இந்தப் பலூனைக் காற்றில் பறக்க விடு." என்றான்.
அந்தச் சிறுவன் "அய்யா மிக்க நன்றி. இந்த கறுப்பு நிறப் பலூனும் உயரமாகப் பறக்க முடியுமா?" என்றான்.
"தம்பி பலூன் அதிக உயரமாக வானத்தில் பறப்பது அதன் நிறத்தில் இல்லை. அதன் உள்ளே உள்ள காற்றைப் பொறுத்துத்தான் அது உயரத்திற்குச் செல்கிறது. இது போல் மனிதனில் பலர் வெவ்வேறு நிறங்களில் இருந்தாலும் அவர்கள் நிறத்தை வைத்து மதிப்பில்லை. அவரவர் உள்ளத்தை வைத்துத்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது." என்றான் அந்த பலூன் வியாபாரி.
மதிப்பும் மரியாதையும் நிறத்திலா இருக்கிறது?