புத்த பகவான் தாம் முதுமையுற்ற நிலையில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அதுவரை அவருடன் எத்தனை எத்தனையோ சீடர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தச் சீடரையும் அவர் அணுக்கத் தொண்டராய் வைத்துக் கொண்டதில்லை.
அணுக்கத் தொண்டர் என்றால், அல்லும் பகலும் எந்த நேரமும் குருவுடன் கூடவே இருந்து அவரது குறிப்பறிந்து குற்றேவல்கள் புரியும் நெருக்கமான சீடர்.
வழக்கமான பிரார்த்தனை முடிந்த ஒரு நாள்.
புடை சூழ்ந்திருந்த சீடர்களை பார்த்துப் புத்த பகவான் கேட்டார் “அருமைச் சீடர்களே, உங்களுக்கேத் தெரியும், நான் இதுவரை யாரையும் என் அணுக்கத் தொண்டராக வைத்துக் கொண்டதில்லை. இப்போதோ எனக்கு தள்ளாமை வந்துவிட்டது, வயதாகிவிட்டது; என்னுடனேத் தங்கியிருந்து எனக்குப் பணிவிடைகள் செய்யவும் திருவோடு, துறவாடைகளைச் சுமந்து வரவும் எனக்கு அணுக்கத் தொண்டர் ஒருவர் தேவைப்படுகிறார். அப்படி என்னுடன் இருக்க விரும்புகிறவர் உங்களில் யார்?” என்று சீடர்களை நோக்கினார்.
எதிரில் குழுமியிருந்த ஒவ்வொரு சீடருமே தங்களுக்குப் பகவானுடன் இருந்து குற்றேவல் புரியும் வாய்ப்பைப் பெரும்பாக்கியமாகவே கருதி மகிழ்ந்து போனார்கள்.
அப்போது சீடர்களில் வணக்கத்துக்கு உரிய சாரிபுத்திர தேவர் எழுந்து நின்றார். புத்த பகவான் ஏனோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
அடுத்து நாகிதர், பின்னர் கனக்கதர், தொடர்ந்து உபவாணர், சாகதர், மேகியர் ஒவ்வொருவரும் பகவானிடம் அணுக்கத் தொண்டுப் பேறுபெறும் ஆர்வத்துடன் எழுந்து நின்றனர். அத்தனை பேருமே புத்த பகவானால் ஒத்தி வைக்கப்பட்டனர்.
அத்தனை சீடர்களில் ஒரே ஒருவர் மட்டும் ஒரு மூலையில் அமர்ந்த நிலை பிசகாமல் நிலம் நோக்கித் தலை தாழ்ந்திருந்தார். புத்த பகவானின் கருணைப் பார்வை அவர் புறம் திரும்பியது. அவர் ஆனந்த தேவர்.
அதைக் கவனித்த மற்ற சீடர்கள். ஆனந்ததேவரைச் சூழ்ந்து கொண்டார்கள். “ஆனந்த தேவரே, பகவான் தங்களைத் தொண்டராக ஏற்றுக் கொள்ளச் சித்தம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தங்களுக்குப் பெரும்பேறு காத்திருக்கிறது. பகவானிடம் தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்'' என்று தூண்டினார்கள்.
ஆனந்ததேவர் ஏதோ ஒரு தயக்கத்துடன் புத்த பகவானை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்து கொண்டார்.
கவனித்துக் கொண்டிருந்த புத்தபகவான் புன்னகைத்து, “பிக்குகளே, ஆனந்தரை விட்டுவிடுங்கள். அவர் தம் விருப்பப்படி நடந்து கொள்ளட்டும். யாரும் அவரைக் கட்டாயப்படுத்த வேண்டாம்'' என்றார்.
ஆனந்ததேவர் பதற்றத்துடன் எழுந்து கொண்டார். தயக்கத்துடன் கூறினார்: ''பகவானே! நான்கு செயல்களைத் தாங்கள் எனக்கு மறுத்து, நான்கு செயல்களில் தாங்கள் எனக்கு அருளினால் அடியேன் என்றென்றும் தங்கள் அணுக்கத் தொண்டனாய் இருக்க ஆசைப்படுகிறேன்''
என்ன இது, பகவான் புத்தரிடம் ஒரு சீடன் நிபந்தனை விதிப்பதா?
மற்றச் சீடர்கள் திகைத்துப் போய் ஆனந்த தேவரையும் அமைதி காக்கும் புத்தரையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.
புத்த பகவான் சாந்தசீலராய், ''சொல்லுங்கள் ஆனந்தரே! நான் எதையெல்லாம் மறுக்க வேண்டும்?'' என்று கேட்டார்.
''புத்த பகவானே, நான்கு விஷயங்களில் தாங்கள் எனக்கு மறுப்பளிக்க வேண்டும்'' என்று அந்த நான்கை விளக்கினார்: ''ஒன்று, பகவானுக்கு நல்லுணவு கிடைத்தால் உடனிருக்கும் அடியேனுக்கு அதைத் தரக்கூடாது. இரண்டு, நல்ல துணிமணி கிடைத்தால் அதையும் எனக்குத் தரக்கூடாது. மூன்று, பகவானுக்கு அளிக்கப்படும் ஆசனத்தில் அடியேனுக்கு இடம் தரக் கூடாது. நான்காவதாக, பகவானைப் பூசை செய்ய யாரேனும் அழைத்தால் தங்களுடன் என்னையும் அழைத்துச் செல்லுதல் கூடாது''
ஆனந்ததேவர் கூறியதைக் கேட்டுப் பகவான் புத்தர் புன்னகைத்தார்.
''நல்லது, தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறேன். நான் தங்களுக்கு நான்கு அருள வேண்டும் என்றீர்களே. அவற்றையும் சொல்லிவிடுங்கள்'' என்றார்.
பகவானைப் பணிவுடன் வணங்கிவிட்டு ஆனந்ததேவர், “பகவானே, என்னைப் பூசை செய்ய எவராவது அழைக்கும் பட்சத்தில் அது எனக்கானதல்ல; தேவரீருடையது. அந்தப் பூசையைத் தாங்கள்தாம் ஏற்க வேண்டும். இரண்டாவதாக, பகவானைத் தரிசிக்க விழைவதாக நான் எவரையேனும் அழைத்து வந்தால் மறுக்காமல் தாங்கள் அவர்களுக்குத் தரிசனம் தந்தருள வேண்டும். மூன்றாவதாக, பகவானே! நான் மனம் தடுமாறித் திகைத்திடும் வேளையில் திசை மாறிப் போய்விடாமல் எளியேனைத் தாங்கள் தேற்றி நல்வழிப்படுத்த வேண்டும். நான்காவதாக, அடியேன் தங்கள் அருகில் இல்லாத பொழுதில் தாங்கள் மற்றவர்களுக்கு அருளும் உபதேசங்களை நான் வந்த பிறகு மீண்டும் தமியேனுக்கும் உபதேசித்தருள வேண்டும்'' என்று வேண்டினார்.
ஆனந்ததேவரின் வேண்டுதலைச் செவிமடுத்த புத்தபிரான் நெகிழ்ந்து போனார். அவரைத் தமது அணுக்கத் தொண்டராக மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டார்.
அன்று முதல் ஆனந்ததேவர் பகவானுடனே இருந்து கண்ணை இமை காப்பது போல் பகவானுக்குக் குற்றேவல்கள் செய்து வந்தார். அவருக்குக் காலையில் பல் விளக்கத் தக்க குச்சிகளைப் பதப்படுத்தித் தருதல், கை கால் முகம் உடல் கழுவத் தூய நீர் தருதல், அவரது அறையை, புழங்கும் சுற்றுப் புறங்களைத் திருவலகு கொண்டு தூய்மை துலக்குதல், இ்த்தகைய தொண்டுகளைச் செய்வதுடன் அவர் தங்கியிருந்த கந்தகுடியை ஒன்பது முறை வலம் வந்து அவரது உபதேசங்களை அடுத்திருந்து உள்வாங்கிக் கொண்டு பக்தி செலுத்தி வரலானார்.
இவற்றையெல்லாம் கருணையுடன் கடாட்சித்து வந்து புத்த பகவான் பின்னாளில் தமது அருமந்த அணுக்கத் தொண்டர் ஆனந்த தேவரைப் பற்றித் தமது மற்றச் சீடர்களிடம் மதிப்பீடு செய்யும் போது இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்:
“பிக்குகளே! உண்மையான சீடர்களிடம் ஐந்து சிறந்த குணங்கள் இருக்க வேண்டும். அவை கல்வியுடைமை, மனவிழிப்புடன் இருத்தல், சோர்வின்றி நடக்கும் ஆற்றல், உறுதியுடைமை, மறதியின்மை என்பனவாம். இந்த ஐந்து மேம்பாடான தகுதிகளும் ஆனந்த தேவரிடம் இருக்கின்றன''
புத்தபகவான் பரிநிர்வாணம் அடையும் வரை அவரது மனம் நிறைந்த அணுக்கத் தொண்டராக இருந்தார் ஆனந்ததேவர். பின்னர் முதலாவது பெளத்த மாநாட்டில் புத்தரின் மேலான போதனைகள் முழுமையாகக் கேட்டு நெஞ்சில் பதித்துக் கொண்டார். தொடர்ந்து அந்தப் போதனைகளை நாடெல்லாம் எடுத்தோதி வந்தார். அவற்றையெல்லாம் திரட்டி நூலாக வெளியிட்டிருக்கிறாரர்கள். அந்த நூலின் பெயர்: ‘தம்ம பிடகம்'