கரடு முரடான மலைப்பாங்குப் பிரதேசத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றுதலுள்ள துறவி ஒருவர் இருந்தார். ஆண்டவனை வழிபடுவதிலும் அடியவர்களுக்கு உதவுவதிலும் காலத்தையும் பொழுதையும் அவர் கழித்து வந்தார். காய் கிழங்குகளைத் தின்று, ஓடையில் ஓடும் நீரைப் பருகி, ஒரு குகையில் அவர் வசித்தார்.
முன்பு ஒரு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகியாக இருந்து, சுகபோகமாக வாழ்ந்தவர் அவர். அங்கே நிலவிய வஞ்சனையும் சூழ்ச்சியும் பதவி வேட்டையும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே நிர்வாகப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, காடு சென்று, தனித்து அவர் வாழ்ந்தார். தியாகசீலராகவும் பக்திமானாகவும் வாழ்ந்தார். ஆகவே அவர் புகழ் எங்கும் பரவியது.
கோடைக்காலத்தில் காட்டு வழியே பிரயாணம் செய்பவர்களுக்கு, அவர் ஓடையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணிவிப்பார். நோயால் வாடுபவர்களுக்குச் சிகிச்சை செய்வார். மனம் நலிந்தோருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவார். காயம் அடைந்தவர்களுக்குக் கட்டுகள் கட்டி விடுவார்.
அவர் காலத்திலேயே பிரசித்தமான கொள்ளைக்கூட்டத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அகம்மது. அவனிடம் ஏராளமான அடிமைகளும் வேலைக்காரர்களும் இருந்தார்கள். கொள்ளையடிக்கப்பட்ட சொத்து, குவியல் குவியலாக இருந்தது.
அகம்மது அந்தத் துறவியைப் பற்றிக் கேள்வியுற்றான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவனான தன்னை அவர் ஏற்றுக் கொள்வாரா என்று அவன் ஐயமுற்றான். தன் புகழும் துறவியின் புகழும் ஒன்று போலவே பரவியிருப்பதால், ஒருவேளை துறவி தன்னை அங்கீகரிப்பார் என்ற எண்ணம் திருடனுக்கு உண்டாயிற்று.
அவன் துறவியிடம் சென்றான். அவரைச் சந்தித்து, ''பெரியவரே, எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க ஐந்நூறு வாள்வீரர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அளவற்ற செல்வம் இருக்கிறது; அடிமைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். அவற்றையெல்லாம் அப்படியே வைத்துக்கொண்டு, எல்லையற்ற நிரந்தர இன்பத்தில் திளைப்பது எப்படி?'' என்று கேட்டான்.
துறவி, குகையை விட்டு வெளியே வந்தார். கொள்ளைக்கூட்டத் தலைவனைப் பக்கத்திலிருக்கும் ஓர் இடத்துக்கு அழைத்துப் போனார். அங்கே மூன்று பெரிய கற்கள் இருந்தன. அவற்றை முதுகில் சுமந்து வருமாறு கொள்ளைக்கூட்டத் தலைவனிடம் துறவி சொன்னார்.
துறவியின் கட்டளைப்படி மூன்று கற்களையும் தன் முதுகில் கொள்ளைக் கூட்டத் தலைவன் தூக்கிக்கொண்டான். பிறகு துறவி அவனிடம், ''என்னைத்' தொடர்ந்து வா'' என்று கூறினார்.
அகம்மது தொடர்ந்து சென்றான். செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் ஏறினார்கள். துறவி எளிதாக ஏறிச்சென்றார். கொள்ளைக்கூட்டத் தலைவனால் ஏற முடியவில்லை.
அவன் துறவியை நோக்கி, ''ஐயா! ஏறுவது சிரமமாக இருக்கிறது. என்ன செய்வது?'' என்று கேட்டான்.
''கற்களில் ஒன்றை மட்டும் போட்டுவிட்டு என் பின்னே வா'' என்று துறவி சொன்னார்.
அகம்மது அதன்படி செய்தான். பிறகு இருவரும் சிறிது தூரம் சென்றார்கள். மீண்டும் கொள்ளைக் கூட்டத் தலைவன் துறவியிடம், ''ஐயா! இப்போதும் ஏறுவது சிரமமாய் இருக்கிறதே?'' என்று தெரிவித்துக் கொண்டான்.
‘’அப்படியானால் மற்றும் ஒரு கல்லைப் போட்டுவிட்டு, என்னைத் தொடர்ந்து வா'' என்று கூறினார் துறவி.
துறவி சொன்னபடி இரண்டாவது கல்லையும் போட்டுவிட்டுத் தலைவன் அவரைத் தொடர்ந்தான்.
சிறிது தூரம் சென்றதும் செங்குத்து அதிகமாக இருந்ததனால் ஏறுவது மிக மிகச் சிரமமாக இருந்தது. ஆகவே திருடர் தலைவன் துறவியிடம், '’ஐயா! என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. என்ன செய்வேன்?'' என்று கேட்டான்.
"சரி, மூன்றாவது கல்லையும் போட்டுவிட்டு என்னைத் தொடர்ந்து வா'' என்று சொன்னார் துறவி.
அதன்படியே செய்துவிட்டுத் திருடர் தலைவன் அவரைத் தொடர்ந்தான். இப்போது அவனுக்கு ஏறுவது மிகவும் சுலபமாக இருந்தது. திருடர் தலைவனும் துறவியும் மலையுச்சியை எளிதில் அடைந்தார்கள்.
அப்போது துறவி கொள்ளைக் கூட்டத் தலைவனை நோக்கி, ''மகனே! புனித உலகத்தை அடைய முடியாதபடி மூன்று சுமைகள் உன்னைத் தடுக்கின்றன. ஆகையால் அவற்றை நீ புறக்கணித்துவிடு. முதலாவது சுமையாக உன்னிடம் இருக்கும் கொள்ளைக் கூட்டத்தைக் கலைத்துவிடு. இரண்டாவது சுமையாக உள்ள அடிமைகளுக்கு விடுதலை வழங்கு. மூன்றாவது சுமையாக இருக்கும் தீய வழியில் சேகரித்த பொருள்களை உரியவர்களிடம் சேர்ப்பித்துவிடு. அதிகாரம், செல்வம், இன்பத்தில் நாட்டம் ஆகிய மூன்றையும் ஒழித்துக் கடவுளை வழிபட வேண்டும். அவ்விதம் செய்யாத ஒருவனால் நற்கதியை அடைய முடியாது'' என்று புத்திமதி சொன்னார்.
துறவியின் அறிவுரை, கொள்ளைக் கூட்டத் தலைவனின் கண்களைத் திறந்தது. அவன் தீய வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் பரிசுத்த வாழ்க்கையை மேற்கொண்டான்.
நற்கதி அடைய விரும்புவோர், நாணயமாக வாழ வேண்டும். பணம், பதவி, பகட்டு ஆகியவற்றினால் ஒருவன் ஒருபோதும் மேன்மையடைய முடியாது.