ஒரு மன்னர் இருந்தார். அவர் ஒரு நாள் தன் அமைச்சரை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார்.
அங்கே ஒரு முனிவர். அவர் முன்னால் அரசர் போய் நின்று, "சுவாமி... என்னை ஆசீர்வதியுங்கள். எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார்.
முனிவர் அரசனை ஆசீர்வதித்தார். பிறகு கூறினார்:
"மகனே! நீ எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதைச் செய்வதற்கு முன்னால் ஒரு தடவை அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நன்றாக யோசித்துப் பார். உன் மனதுக்கு 'அது சரி!' என்று தெரிந்தால் மட்டும் அதை நீ செய்ய வேண்டும்!” என்றார்.
அரசர், முனிவர் சொன்னதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டார்.
அவர் முனிவர் காலடியில் விழுந்து வணங்கினார்; நூறு பொற்காசுகளை முனிவர் காலடியில் வைத்துவிட்டுத் திரும்பினார்.
அரசரின் செயலை அமைச்சர் கவனித்தார்.
அவர், 'என்ன இது! நமது அரசர் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாரே... இந்த ஒரு சாதாரண யோசனை சொன்னதற்காக மன்னர் முனிவருக்கு நூறு பொற்காசுகள் கொடுத்து விட்டாரே!' என்று நினைத்தார்.
அமைச்சர் இப்படி நினைப்பது அவர் முகத்தைப் பார்த்ததுமே அரசருக்குப் புரிந்தது. இருந்தாலும் அதைப் பற்றி அமைச்சரிடம் அரசர் ஒன்றும் கேட்கவில்லை!
இரண்டு பேரும் அரண்மனைக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
அதற்குப் பிறகு அரசர் என்ன செய்தார் தெரியுமா?
காட்டில் முனிவர் சொன்ன அந்தப் புத்திமதியை ஒரு கல்லில் கல்வெட்டாகச் செதுக்கினார். அதைத் தன் அறையில் எல்லோருடைய கண்ணிலும் படும் வகையில் பதித்து வைத்தார்.
இப்போதும் அரசரின் செயலைக் கவனித்த அமைச்சர், 'என்ன இது? நம் மன்னரின் அறியாமையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இதைப் போய் கல்லில் செதுக்கி வைக்க வேண்டுமா?' என்று நினைத்துக் கொண்டார்.
சில நாட்கள் கடந்தன.
ஒரு நாள் அந்த மன்னருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
உடனே அவர் அரண்மனை வைத்தியரைக் கூப்பிட்டார்.
வைத்தியர் வந்து சேர்ந்தார். அவர் மன்னரைச் சோதித்துப் பார்த்துவிட்டு, “சிறிது நேரம் இப்படியே படுத்திருங்கள்... நான் எங்கள் வீட்டுக்குப் போய் இந்த நோய் நீங்குவதற்குரிய ஒரு மருந்தைத் தயார் செய்து கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு விரைந்து சென்றார்.
வைத்தியர் வீட்டிலிருந்து மருந்து எடுத்துக் கொண்டு வந்த சமயத்தில் மன்னர் ஒரு கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். அருகில் அப்போது யாரும் இல்லை.
வைத்தியர் வந்தார். ஒரு சிறிய கோப்பையில் கொஞ்சம் மருந்தை ஊற்றினார். சுற்றும் முற்றும் பார்த்தார். ஏதோ ஒரு பொடியை மருந்தில் கலந்தார்... கலந்து எடுத்துக் கொண்டு மன்னரை நெருங்கினார். கொஞ்சம் யோசித்தார். பிறகு திரும்பிப் போனார். கையிலிருந்த மருந்தைக் கீழே கொட்டிவிட்டு வந்தார். அந்தக் கோப்பையை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் சிறிது மருந்தை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து, "மன்னா!” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
மன்னர் எழுந்தார்! “வைத்தியரே... நான் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது நீங்கள் செய்ததைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். முதலில் எதையோ கலந்தீர்கள்... பிறகு அதைக் கொட்டிவிட்டு இப்போது வேறு கொண்டு வருகிறீர்கள். என்ன விஷயம்? உண்மையைச் சொல்லுங்கள்!” என்று மிரட்டினார்.
வைத்தியர் பயந்து போய்விட்டார்.
அப்படியே மன்னரின் காலில் பொத்தென்று விழுந்தார். உண்மையைச் சொன்னார்:
“மகாராஜா... உங்களுடைய படைத்தளபதி உங்களைக் கொல்ல சதி செய்தார். அவர் என்னிடம் விஷம் கலந்து உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் பொருட்டு அவர் எனக்கு நிறைய வெகுமதி தருவதாகக் கூறினார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு இங்கே வந்தேன். அவர் கொடுத்த விஷப்பொடியை மருந்தில் கலந்தேன்... அதை எடுத்துக் கொண்டு உங்களிடம் வந்த போது எதிரில் நீங்கள் வைத்திருக்கும், 'நீ எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதைச் செய்வதற்கு முன்னால் ஒரு முறை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை நன்றாக யோசித்துப் பார். உன் மனதுக்கு 'அது சரி' என்று தெரிந்தால் மட்டும் அதை நீ செய்ய வேண்டும்!' என்ற வாசகம் என் கண்ணில்பட்டது. அது என்னை யோசிக்க வைத்தது. நான் செய்யும் செயலால் என் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டேன். உடனே திரும்பிப் போய் விஷத்தைக் கொட்டி, கழுவிவிட்டு வேறு மருந்து ஊற்றிக் கொண்டு வருகிறேன்!” என்று தெரிவித்தார்.
இப்போது அந்த மன்னர் அமைச்சரைக் கூப்பிட்டு, “பார்த்தீர்களா... இந்தப் புத்திமதியை அன்றைக்கு நீங்கள் அலட்சியமாக நினைத்தீர்கள். இன்றைக்கு அதுதான் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது!” என்றார்.
அமைச்சர் தலையைக் குனிந்து கொண்டார்.
எனவே, பெரியவர்கள் நமக்குச் சொல்லும் அறிவுரை ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தெரியும்! அதற்காக நாம் அதை அலட்சியம் செய்யக்கூடாது.