ஓர் ஆசிரியர் ஒரு மாணவனின் கையில் பிரம்பைக் கொடுத்தார். எப்படி? அன்று அந்த வகுப்புக்கு வர வேண்டிய ஆசிரியர் வரவில்லை. அதனால் வேறொருவர் வந்தார்.
அந்த வகுப்புத் தலைமை மாணவனை அழைத்து அவனிடம் பிரம்பைக் கொடுத்து, நான் தூங்கப் போகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குச் சத்தம் வராமல் பார்த்துக் கொள்" என்றார்.
பிறகு சட்டையைக் கழற்றிவிட்டுப் பெஞ்சில் படுத்துத் தூங்கிவிட்டார்.
அந்நேரம் திடீரென கல்வி ஆய்வாளர் வந்தார்.
ஜீப் சத்தம் கேட்டதும் ஆசிரியர் ஓடி வந்து மாணவர்களின் முன் நின்று விட்டார்.
சட்டையின்றி இருப்பதை உணர்ந்து தன் மார்பைக் காட்டி, மாணவர்களே! இது விலா எலும்பு, இது நெஞ்சு எலும்பு, இது..." என்று பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
‘ஆஹா! ஆசிரியர்கள் பெரும்பாலும் படத்தை வைத்துக் கொண்டுதான் பாடம் எடுப்பார்கள். இவர் தன் உடம்பைக் காட்டியே பாடம் எடுக்கிறாரே. மிகவும் நல்ல ஆசிரியர். இவருக்கு ஏதாவது விருது கொடுக்க வேண்டும்’ என்று நினைத்தபடி ஆய்வாளர் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார்.
தான் கண்டதை அவரிடம் சொன்னார்.
தலைமை ஆசிரியர், அப்படி ஒருவர் நம் பள்ளியிலா என்று நினைத்தபடி, ஆய்வாளருடன் வகுப்புக்கு வந்தார்.
அதற்குள், ஆய்வாளர் போய்விட்டார் என்று ஆசிரியர் மறுபடியும் தூங்கிவிட்டார்.
அப்போது தலைமை ஆசிரியர் அவரை எழுப்ப ஆரம்பித்தார்.
உடனே ஆய்வாளர், “சார், தொந்தரவு செய்யாதீர்கள். இப்போது அவர் தூங்குவது எப்படி என்பது பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்" என்றார்!