ஒரு வலிமையான மரம் வெட்டி ஒரு மர வியாபாரியிடம் சென்று வேலை கேட்டான்.
வேலையும் கிடைத்தது.
நல்ல சம்பளத்துடன் வேலைச் சூழ்நிலையும் நன்றாகவே இருந்தது. எனவே, அந்த மரம் வெட்டி சிறப்பாகப் பணிபுரிய வேண்டும் என எண்ணினான். வியாபாரி அவனிடம் ஒரு கோடாரியைக் கொடுத்து மரங்கள் வெட்ட வேண்டிய இடத்தைக் காட்டினார்.
முதல் நாள் அந்த மரம் வெட்டி பதினெட்டு மரங்களை வெட்டிக் கொண்டு வந்தான்.
அவனை மிகவும் பாராட்டிய வியாபாரி, ‘’இப்படியேத் தொடர்ந்து வேலை செய்!" என்றார். வியாபாரியின் பாராட்டுதலால் ஊக்குவிக்கப்பட்ட மரம் வெட்டி, மறுநாள் இன்னும் உற்சாகமாக வேலை செய்தான்.
ஆனால், அவனால் அன்று பதினைந்து மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது.
மூன்றாம் நாள் மேலும் அதிகமாக முயன்று வேலை செய்த போதும், பத்து மரங்களை மட்டுமே அவனால் வெட்ட முடிந்தது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் அவன் வெட்டிய மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
‘நான் எனது வலிமையை இழந்து கொண்டிருக்கிறேனா?’ என மரம் வெட்டி சந்தேகப்படத் தொடங்கினான்.
அவன் தன் முதலாளியிடம் சென்று, ஐயா, நான் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் முதல் நாள் வெட்டியது போல் என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை" என்று புலம்பினான்.
முதலாளி அவனிடம், “நீ கடைசியாக எப்போது உனது கோடாரியைக் கூர்மைப்படுத்தினாய்?" என்று கேட்டார்.
உடனே மரம்வெட்டி, “கூர்மைப்படுத்துவதா? கோடாரியைக் கூர்மைப்படுத்த எனக்கு ஏது நேரம்? என் நேரமெல்லாம் மரங்களை வெட்டுவதிலேயே செலவாகி விடுகிறதே?" என்றான்.
நமது வாழ்க்கையும் இப்படித்தான். நாம் நமது ‘கோடாரியைக் கூர்மைப்படுத்த’ நேரம் ஒதுக்குவதில்லை.
இன்றைய உலகில் ஒவ்வொருவரும் முன்பைவிட அதிகமாகச் செயலாற்றி வருகின்றனர். ஆனால், மகிழ்ச்சி மட்டும் குறைந்து கொண்டே வருகிறது.
ஏன்? நாம் எப்படிக் கூர்மையாக இருப்பது என்பதை மறந்து விட்டோமா?
கடினமான உழைப்பு வேண்டியதுதான். ஆனால் இடையறாது செயல்புரிவதால் நாம் புத்தகங்கள் படித்தல், உடற்பயிற்சி, வேலையில் ஈடுபாடு, பிரார்த்தனை போன்றவைகளுக்கு நேரமே ஒதுக்குவதில்லை.
கோடாரியைக் கூராக்குவதைப் போலவே, நமது வாழ்க்கைக்கு மெருகேற்ற நாம் நேரம் ஒதுக்காவிட்டால், நாம் அனைவரும் சோர்வுற்றுத் திறமை இழந்தவர்களாகிவிடுவோம்.