அன்று பௌர்ணமி. குருகுலத்தில் தன் சீடர்களுக்குச் சில நெறிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் குரு.
அன்று குருகுலத்திற்கு அதிகம் பேர் வந்து குருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். வந்தவர்கள் குருவிற்குப் பழங்களை காணிக்கையாகத் தந்ததால் நிறைய பழங்கள் சேர்ந்துவிட்டன.
குரு தமது சீடர்களில் ஒருவனைக் கூப்பிட்டுப் பழங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும்படிக் கூறினார். சீடனுக்கோ பழத்தை யாரிடம் முதலில் தர வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டானது.
குருவிடம் கேட்டான். ‘‘உனக்கு யார் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ, யார் மிகவும் உண்மையானவர் என்று எண்ணுகிறாயோ அவருக்கு முதல் பழத்தைக் கொடு’’ என்றார்.
எல்லோரும், அச்சீடன் தன் குருவுக்குத்தான் முதலில் கொடுப்பான் என்று எண்ணினர்.
ஆனால், அச்சீடன் முதலில் கையில் எடுத்த பழத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டான்! யாரும் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
‘‘என்ன காரியம் செய்துவிட்டாய்? குருவிற்கு முன்பாக அவரை அவமதித்தது போல் நடந்து கொள்ளலாமா? தவறு செய்துவிட்டாயே’’ என்று மற்ற சீடர்கள் கூறினார்கள்.
ஆனால் குரு என்ன சொன்னார்? தெரியுமா?
‘‘ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். உண்மையும், நம்பிக்கையும் ஒருவனை நேர்வழிப்படுத்தும் கிரியா ஊக்கிகள். அவை இவனிடம் நிறைந்திருக்கின்றன’’ என மகிழ்ச்சியுடன் கூறி அந்தச் சீடனை குருகுலத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார் குரு.