நீண்ட நேரமாக மாடுகள் செக்கைச் சுற்றிக் கொண்டிருந்தன.
தன்னையே கால் வலிக்கச் சுற்றி வரும் மாடுகளைப் பார்த்து செக்கு இரக்கப்பட்டது.
"இந்த மாடுகள் இப்படி கால் வலிக்க தினமும் நம்மையேச் சுற்றிச் சுற்றி வருகின்றதே! இந்த மாடுகள் மிகவும் களைப்படைந்து போயிருக்குமே என்று நினைத்தபடி மாட்டைப் பார்த்து, மாடுகளே, நீங்கள் தினமும் என்னையேச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு ஓய்வே கிடைக்காதா? உங்கள் கஷ்டத்தைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது..." என்றது அந்த செக்கு.
இதைக் கேட்ட மாடுகள் தங்கள் கஷ்டத்தை உணர்ந்து பார்க்கும் செக்கைப் பாசத்துடன் பார்த்தது.
"செக்கே, உன்னிடம் இருக்கும் கருணை கூட இந்த மனிதர்களிடத்தில் இல்லையே... நன்றி, கருணை, இரக்கம் என்று எதுவுமே இல்லாத இந்த மனிதர்களைச் சுற்றி வருவதை விட உன்னைச் சுற்றி வருவது எவ்வளவோ மேல்" என்று கூறியது.
உடனே செக்கு, "மாடுகளே, மனிதர்களைக் கண்டால் உனக்கு ஏன் அவ்வளவு வெறுப்பாகத் தோன்றுகிறது? " என்று கேட்டது.
அதற்கு மாடுகள், " செக்கே இந்த மனிதர்கள் எங்களிடமிருந்து உழைப்பை மட்டும் வாங்கிக் கொண்டு சரிவர உணவு கொடுக்காமல் கொடுமைப் படுத்துகின்றார்கள். எங்கள் மூலம் செக்கை ஓட விட்டு எண்ணெய்யை மட்டும் ஆட்டி எடுத்து பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். எங்களை மறந்த அவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள். அதனால் மனிதர்கள் மீதே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது." என்றன.