வெகு காலத்திற்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் 'சாப்பல்' என்ற பெயருடைய ஒரு மகாகவி வாழ்ந்து வந்தார். அவருடைய புகழ் நாடெங்கிலும் பரவி, புகழின் உச்சியில் அவர் இருந்தார்.
அதைக் கண்ட 'பிரிஸ்ஸாக் பிரபு' என்ற சிற்றரசர் ஒருவர், மகாகவியை தன்னுடனே வைத்துக் கொண்டால், அவர் புகழில் தமக்கும் கொஞ்சம் கிட்டும் என்ற ஆசையில், அவரைத் தன்னுடனேயே வந்துவிடும்படி கடிதம் எழுதினார்.
கடிதத்தைக் கண்ட சாப்பல், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்று எண்ணி, புறப்பட்டுவிட்டார்.
ஆனால், போகும் வழியில் உலகப் பிரசித்தி பெற்ற 'புளூடார்க்' என்னும் கிரேக்க அறிஞர் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது.
அதில் ஒரு பக்கத்தில் புளூடார்க், "பிரபுக்களுடன் வாழ்பவன் நாளாக நாளாக பிரபுக்களுக்கே அடிமையாகி விடுவான்!” என்று குறிப்பிட்டிருந்தது.
அதைப் படித்ததும் சாப்பல் விழித்துக் கொண்டார்.
'ஆகா! என்ன தவறைச் செய்ய இருந்தோம்? எப்படி இந்த அறிவு நமக்கு எட்டாமல் போய்விட்டது? நல்ல வேளை 'புளுடார்க் நம் கண்களைத் திறந்துவிட்டார்' என்று பிரபுவின் ஊருக்குப் போகாமல் தம்முடைய ஊருக்கேத் திரும்பி வந்து சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்.