"அத்தை! இன்று பண்டிகை நாள். நாங்கள் இன்று பந்தியில் வெள்ளித்தட்டில்தான் சாப்பிடுவோம்” என்று அனந்தபட்டரும் அவருடைய மைத்துனனும் அடம் பிடித்தார்கள்.
அத்தையும் தம் கணவர் பாலபட்டரிடம், சிறுவர்களின் முரண்டு பற்றிக் கூறி முறையிட்டாள்.
"இன்று மட்டுமாவது இவர்கள் இருவரும் வெள்ளித்தட்டில் சாப்பிடட்டுமே!'' என்று கேட்டுப் பார்த்தாள்.
பாலபட்டரின் காசி நகரப் பாடசாலையை ஜெய்ப்பூர் தர்பார் ஏற்று நடத்தி வந்தது.
சிஷ்யர்களில் நான்கு அல்லது ஆறு சாஸ்திரங்கள் கற்றுத் தேறியவர்கள்தான் பந்தியில் வெள்ளித்தட்டில் சாப்பிட முடியும்; மற்ற மாணவர்கள் வாழையிலையில்தான் சாப்பிட வேண்டும். இது அந்தப் பாடசாலையில் இருந்த நடைமுறை. எனவே, தமது சொந்தக்காரப் பையன்கள் என்பதால் நான்கு சாஸ்திரம் படிக்காத அந்த இருவரையும் பந்தியில் வெள்ளித்தட்டில் சாப்பிட அனுமதிக்கவில்லை பாலபட்டர்.
அவர் தன் மனைவியிடம், ''அன்பு அதிகமாக இருக்குமானால் சமையலறையில் அடுப்புக்குப் பக்கத்தில் வெள்ளித்தட்டில் அவர்கள் சாப்பிடட்டும். பந்தியில் வெள்ளித்தட்டில் சாப்பிட அனுமதிப்பது, நன்கு கற்றறிந்த மாணவர்களை அவமதிப்பது போல் ஆகும்'' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
அனந்தபட்டருக்கு இது 'சுரீர்' என்று மனதில் தைத்தது.
கடுமையாக உழைத்துப் படித்து பிற்காலத்தில் வேதாந்தத்தில் தலைச்சிறந்த புலமை பெற்று விளங்கினார்.
இவரிடம் மாணாக்கராகப் பயின்றவர்தான் மகாராஷ்டிரத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த நீதிமான் ராமசாஸ்திரி பிரபுணே.