ஒரு வீட்டில் பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த அக்கறை இருந்தது.
பிள்ளையை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவனும் தினசரி பள்ளிக்கூடம் சென்றான்.
ஒருநாள் அவனிடம் அம்மா கேட்டாள்.
''எங்கே! ஒன்று, இரண்டு சொல்லு பார்ப்போம்!''
''ஒன்று!''
அத்துடன் நின்றுவிட்டது. அம்மா தரதரவென்று பையனை இழுத்துக் கொண்டு ஆசிரியரிடம் போனாள்.
''இவனுக்கு ஒன்று, இரண்டு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?'' என்று கேட்டாள்.
''ஓ! கேட்டுப் பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே'' என்றார் ஆசிரியர்.
''நீங்களேக் கேட்டுப் பாருங்க!'' என்று அம்மா சலித்தாள்.
''சொல்லுடா!'' என்றார் ஆசிரியர்.
அவன் சொன்னான்.
''ஒன்று!''
உடனே ஆசிரியர், ''ம்!'' கொட்டினார், ஆதரவாக. தயக்கமின்றி பையன் 'இரண்டு'' சொன்னான்.
ஆசிரியர் மறக்காமல் ''ம்!'' கொட்டினார். எக்ஸ்பிரஸ் வேகத்தில் பையன் சொல்ல ஆரம்பித்தான்.
''மூன்று!''
''ம்ம்!''
''நான்கு!''
''ம்ம்!''
நூறு வரை பையன் மளமளவென்று சொல்லி முடித்தான்.
அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
கதை உங்களுக்குப் புரிந்ததா?
ஆசிரியர் சொன்ன ''ம்ம்!'' தான் அவன் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம். அந்த அங்கீகாரம் இல்லாமல் அவனால் மேலே, போக முடியாது.
'உயிரோட்டமான வகுப்பறை' என்கிறோமே அந்த 'வகுப்பறையின் உயிர்' என்பது எது? ஆசிரியரின் திறமையா?
இல்லை! மாணவரின் பங்கேற்பே அது.