கவலையுடன் இருந்த சீடனிடம், குரு கேட்டார்: ''என்ன ஆயிற்று? ஏன் வருத்தமாக இருக்கிறாய்?''
''குருவே, பல ஆண்டுகளாயும் இன்னும் கடவுளைக் காண முடியவில்லையே?''
கருணையுடன் குரு, ''இன்றைக்குப் பாடம் வேண்டாம். நீ கொஞ்சம் போய் பூ, பழம் வாங்கி வா.''
உடனே சீடன், வெகுதூரம் சென்று குரு கூறியபடி எல்லாம் வாங்கி வந்தான்.
சீடனிடம் குரு கேட்டார்:
''நீ பழமெல்லாம் வாங்க ஊருக்குள் சென்று வந்தாயே, வழியில் என்னவெல்லாம் பார்த்தாய், கவனமாக யோசித்துச் சொல்.''
சீடன் சற்றே யோசித்துவிட்டு, ''மாட்டு வண்டி, நாய், குதிரை, மரங்கள், மனிதர்கள்'' என்றான்.
''அவ்வளவுதானா? வேறெதையும் விட்டு விடவில்லையே?''
''ஒரு கோவில் யானையும் பார்த்தேன். மறந்துவிட்டேன். மன்னியுங்கள். குருவே'' என்றான் சீடன்.
''இப்போது நிச்சயமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய் அல்லவா?''
''ஆம் குருவே அவ்வளவுதான்'' என்று உறுதியாகச் சொன்னான் சீடன்.
குரு சொன்னார்:
''அப்பா, நீ இதுவரை பார்த்த அத்தனையையும் சூரிய வெளிச்சத்தில்தானே பார்த்தாய். எப்போதும் உன்னுடனேயே இருந்து எல்லாவற்றையும் காண்பித்த சூரியனை நீ காணவில்லையே?''
இப்படித்தான் நாம் நம்முள்ளேயே இருந்து எங்கும் நிறைந்திருக்கும் கடவுளைக் காண்பதில்லை. மற்ற விஷயங்கள் நம் கண்களை மறைக்கின்றன.