ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சிறுவயதிலிருந்தே ஒரு சிங்கம் வளர்ந்து வந்தது.
ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு அந்தச் சிங்கத்தை வண்டியிலேற்றி எடுத்துச் செல்லும்போது கம்பி வழியாக வெளியே அடர்ந்த காடுகள், மலைகள் ஆகியவற்றை அது பார்க்கும். அப்போதெல்லாம் அது தானும் அவ்வாறு கம்பி வெளியே ஓடிச் சுதந்திரமாக திரிந்து வாழ வேண்டும் என்று எண்ணுவதுண்டு.
ஒரு நாள் இரை போடும் போது திறந்த கூண்டு மூடப்படாமல் மறந்து போய் விடப்படவே, இதுதான் நல்ல சமயம் என்று சிங்கம் தப்பி ஓடியது. காட்டில் ஆனந்தமாக ஓடியாடிக் கடைசியில் களைத்துப்போய் ஓரிடத்தில் அமர்ந்தது.
அதற்கோ நல்ல பசி. சர்க்கஸில் நேரம் தவறாமல் உட்கார்ந்த இடத்திலேயே இரையுண்டு பழகியதால் அது இரைதேடி எங்கும் செல்லவில்லை. என்னதான் சிங்கமேயானாலும் இரை அதன் வாயில் வந்து விழுமா? எத்தனையோ முயல்கள், மான்கள் கண்ணெதிரே ஓடுவதைப் பார்த்தும் அது அவைகளைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை.
மிகுந்த பசி ஏற்பட்டு ஒரு முயலை பிடிக்கத் தாவியது. அதற்குள் அந்த முயல் ஓடிவிட்டது. பயிற்சியின்மையால் எந்த மிருகத்தையும் பிடிக்கச் சக்தியற்றதாய் நின்றது.
தொடர்ந்து முயற்சி செய்தால் அது சில மிருகங்களை இரையாக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சோர்ந்து பசியால் வாடி மீண்டும் சர்க்கஸ் கூண்டிற்குத் திரும்பிவிடலாமா என்று நம்பிக்கையிழந்து யோசனை செய்தது.
இந்த சிங்கத்தைப் போலத்தான் பலரும் தங்கள் வாழ்க்கையை முதலில் குறுகிய கூண்டுக்குள் அடைத்துக் கொள்கிறார்கள். அதன் பின்பு, அந்தக் கூண்டை விட்டு வெளியேறினாலும், சரியான முயற்சியின்மையால் நம்பிக்கையிழந்து வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள்.