ராணுவத்தில் பணிபுரிந்த படை வீரன் ஒருவன் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அவனுடைய சொந்த கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். நீண்ட தூரப் பயணத்தில் அவன் சாப்பிடுவதற்காக வைத்திருந்த ரொட்டியும், கையிலிருந்த பணமும் காலியாகி விட்டது.
ஒருநாள் அவன் ஒரு கிராமத்தை வந்தடைந்தான். இரவாகி விட்டது.
எங்கே தங்கலாம்? என அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டான்.
"இன்று வழிப்போக்கர்களைத் தங்க வைப்பது அந்த ஊரிலுள்ள ஒரு பணக்காரியின் முறையாகும்" என்றார் அந்தப் பெரியவர். "ஆனால்?" என்று தயங்கிய அந்தப் பெரியவர், " அவள் ஒரு கருமி. எச்சில் கையால் காக்கையைக் கூட விரட்ட மாட்டாள்" என்றார்.
"அதனால் என்ன பரவாயில்லை" என்ற படை வீரன் அந்த பணக்காரியின் வீட்டிற்குச் சென்றான்.
அந்தப் பணக்காரியிடம் ," சாப்பிட ஏதாவது உணவு இருந்தால் கொடுங்களேன்" என்று கேட்டான்.
ஆனால் அவள் ஒரு செவிடு போல் பாசாங்கு செய்து " நல்லது, நீங்கள் உட்காரலாமே? " என்றாள்.
படை வீரன் " எனக்குப் பசிக்கிறது என்று சொன்னேன்" என்றான்.
"நீங்கள் கவலைப்பட வேண்டாம். உட்காரும் நாற்காலி உடைந்து போகாது" என்றாள் அவள்.
"தயவுசெய்து சிறிது உணவு தாருங்கள்"என்று கெஞ்சினான்.
"ஆனால், என்னிடம் ஒன்றுமில்லை" என்றாள் கருமி.
"அப்படியானால், கஞ்சியாவது காய்ச்சிக் கொடுங்கள்"
"கஞ்சி காய்ச்சுவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?"
படைவீரன் தன் மீசையை முறுக்கியபடி, "பரவாயில்லை, எனக்கு ஒரு கோடாரி இருந்தால் கொடுங்கள். நான் கோடாரியில் கஞ்சி காய்ச்சுவேன்" என்றான்.
"கோடாரிக் கஞ்சியா? அதை எப்படிக் காய்ச்சுவது?" என்று ஆச்சரியப்பட்ட அவள் ஒரு கோடாரியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவன் பானையை எடுத்து நீரூற்றி அதற்குள் கோடாரியைப் போட்டு அடுப்பில் எடுத்து வைத்தான். நீண்ட நேரத்திற்குப் பிறகு, கஞ்சியைச் சுவை பார்த்தான். "கஞ்சி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் உப்பில்லையே" என்றான்.
அவள் உப்பைக் கொண்டு வந்து தந்தாள்.
இன்னும் சிறிது நேரம் கழிந்தது. " இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் கெட்டியாக இல்லையே. இதில் சிறிது பார்லியைப் போட்டால் சரியாகிவிடும்." என்றான்.
அவள் பார்லியைக் கொண்டு வந்து தந்தாள்.
படைவீரன் தன் சமையலில் தீவீரமாக இருந்தான். "கஞ்சி தயார். சிறிது வெண்ணெய் கிடைத்தால் போதும்" என்றான்.
வெண்ணெய்யும் கொடுத்தாள் அந்த கருமி. அதிசயமான கோடாரிக் கஞ்சி குடிக்கும் ஆவலுடன் சாப்பாட்டு மேஜையில் ரொட்டியையும் பாலையும் கொண்டு வந்து வைத்தாள்.
இருவரும் சாப்பிடத் துவங்கினர். மிகவும் ரசித்து ருசித்து கஞ்சியை உறிஞ்சிக் குடித்தாள் கருமி. "மிக அருமையான கஞ்சி. அது சரி இந்தக் கோடாரியை எப்போது சாப்பிடுவது? எனக் கேட்டாள்.
படைவீரனும் தன்னிடமிருந்த கரண்டியால் அந்தக் கோடாரியைக் குத்திப் பார்த்து, "இது இன்னும் வேகாமல் இருக்கிறது. அதனாலென்ன, நான் பிறகு இதை வேக வைத்துக் கொள்கிறேன்." என்றபடி கோடாரியை எடுத்துத் தன் பைக்குள் வைத்துக் கொண்டான்.
ஆக, அந்தக் கருமியிடமிருந்து உணவைப் பெற்றதோடல்லாமல் அவளுடைய கோடாரியையும் சாமார்த்தியமாகக் கவர்ந்து கொண்டான், அந்தப் படைவீரன்.