ஒரு முறை அரசன் ஒருவன் கிராமப்புறம் வழியாக வந்து கொண்டிருந்தான். வழியில் தள்ளாடும் கிழவன் ஒருவன் ஏதோ ஒரு மரக்கன்றினை நட்டுக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த அரசன், ''என்ன கிழவரே! காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது. இதுதான் உம் நிலை. இந்நிலையில் மரக்கன்றினை நட்டுக் கொண்டிருக்கிறீர். இம்மரம் வளர்ந்து பயனளிக்கும் வரையில் நீர் உயிரோடு இருப்பீர் என்ற நம்பிக்கை உமக்கு இருக்கிறதா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தக் கிழவன், "அரசே! என் முன்னோர்கள் நான் பயன் பெறுவதற்காக இந்த மரங்களை நட்டுச் சென்றுள்ளார்கள். அது போல நானும் என் பின்னால் வருபவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும். அதற்காக இந்த மரக்கன்றை நட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்றான்.
இதைக் கேட்ட அரசன், "முதியவரே! உம் போன்றவர்களால்தான் நாடு நலமாகவும் வளமாகவும் உள்ளது'' என்று கூறி அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான்.