சமஸ்கிருதத்தை உயிர்மூச்சாகக் கொண்ட ஒரு மாணவன் இருந்தான். அவன் சமஸ்கிருதத்திலேயே பேசுவான்; அவனது கணித ஆசிரியருக்கு அவனை வேறு மொழியில் பேச வைத்துவிட வேண்டும் என்ற ஆவல்.
ஒரு நாள் வகுப்பில் கடினமான தொடர் கணக்குகளைத் தந்திருந்தார். இந்த மாணவன் கணிதத்திலும் நல்ல திறனுடையவன். எனவே அவன் விரைவிலேயே முடித்து விட்டான்.
வியந்த ஆசிரியர், ‘‘என்ன ஸம்ஸ் (Sums) எல்லாம் போட்டுவிட்டாயா?’’ என்றார்.
அவனோ-, ‘‘ஸம்ஸ் கிருதம்’’ (கணக்குகளைச் செய்துவிட்டேன்) என்றான்.
‘‘சரியாகப் போட்டாயா?’’ என்று அவர் கேட்க, ‘‘ஸம்யக் கிருதம்’’ (சரியாகச் செய்திருக்கிறேன்) என்றான் அவன்.
‘‘என்ன விடை வந்தது?’’ என்றார் அவர்.
‘‘பூஜ்யம்’’ என்றான் அவன்.
‘‘நீ உண்மையிலேயே கணக்கிலும் திறனுடையவன்தான்; ஆமாம், எண்களிலேயே எல்லாவற்றையும் விடப் பெரியது எது, சிறியது எது?’’ என்றார் அவர்.
‘‘அணோரணீயான், மஹதோ மஹீயான் பூஜ்யமேவ’’ (அணுவிலும் சிறியது, பெரிதிலும் பெரிது பூஜ்யம்தான்) என்றான்.
‘‘என்னை என்னவென்று நினைத்தாய்?’’ என்றார் குரு சிறிது வெகுண்டு.
‘‘தாங்கள் பூஜ்ய ஸ்ரீகுரு:’’ (மரியாதைக்குரிய குரு).
வெறுத்துப் போனவராக, ‘‘மறுபடி பூஜ்யமா? குருவுக்கும் பூஜ்யத்துக்கும் என்ன தொடர்பு?’’ என்றார் அவர்.
அவனோ அமைதியாக, ‘‘குரு: பூஜ்ய: பூஜ்யம் குரு:’’ (ஆசிரியர் வணக்கத்துக்குரியவர். பூஜ்யமோ எல்லாவற்றிலும் பெரியது) என்றான்.
பாவம். தோல்வியை ஒத்துக் கொள்வதைத் தவிர, வேறென்ன செய்வார் அவர்?