பெற்றோரைப் பார்த்துத்தான் குழந்தை பலவற்றையும் கற்றுக்கொள்கிறது! பெற்றோர்கள் நல்ல பழக்கங்களைக் கொண்டிருந்தால், குழந்தையும் நல்லதையே கற்கும்.
பெற்றோரிடமிருந்து கற்க வேண்டியதைக் கற்ற மகனும், கற்கக் கூடாததைக் கற்றவனும்தான் எவ்வளவு வேறுபடுகின்றனர்!
தந்தையிடம் இருந்த நற்பழக்கங்களைக் கண்டு நல்லவற்றைக் கற்ற மகனின் கடிதம் இது!
அன்புள்ள அப்பாவிற்கு, வணக்கம்.
* சாலையில் யாரோ ஒருவருக்கு நீங்கள் உதவியபோது, பிறருக்கு உதவுவதை உங்களிடமிருந்து கற்றேன்.
* ஆறு வயதில் நான் வரைந்த முதல் ஓவியத்தை எனக்குத் தெரியாமல், பிரிட்ஜின் மேல் நீங்கள் ஒட்டியது அடுத்த படம் வரையும் ஆவலை என்னுள் தூண்டியது.
* தினமும் காலையில் அமைதியாக, நீங்கள் பூஜை செய்து விட்டு, பெரிய எழுத்துகள் கொண்ட ஒரு புத்தகத்தைப் படிப்பதைப் பார்ப்பேன். அதன் மூலம் பிரார்த்தனையுடன் ஒவ்வொரு நாளையும் துவக்க வேண்டும்; கடவுள் நம்முடன் பேச என்றும் தயார்; அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என அறிந்தேன்.
* தம்பிக்கு நீங்களே ஒரு டம்ளர் நீர் கொண்டு வந்து கொடுத்தபோது, ஒவ்வொருவரும் எந்தச் சிறு வேலையையும் மகிழ்வுடன் செய்ய வேண்டும் என்று கற்றேன்.
* குளிரால் நடுங்கிய எனக்கு நீங்கள் போர்வையைப் போர்த்தினீர்கள். நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்; உங்கள் பாதுகாப்பில் நான் உள்ளேன் என அப்போது உணர்ந்தேன்.
* உங்கள் நண்பர் நோயுற்றபோது நீங்களே உணவெடுத்துச் சென்றீர்கள். பிறர் நலனில் அக்கறை கொண்டு ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
* உங்கள் நேரம், பணம் இவற்றை ஏழைகளுக்குச் செலவிட்டீர்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தந்து உதவ வேண்டும் என்று அறிந்தேன்.
* என் நண்பனை நீங்கள் பாராட்டினீர்கள். பிறரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கற்றேன்.
* உடைந்த நாற்காலியை நீங்கள் சரி செய்தீர்கள். எதில் குறை இருந்தாலும் அதைச் சீர்செய்ய வேண்டும் என்று புரிந்தது.
* அமைதியான உங்கள் கண்களில் சில நேரங்களில் கண்ணீரைக் காண்பேன். அழுதால் மனம் லேசாகும் என்று புரிந்தது.
* என் ரொட்டிக்கு வெண்ணெய் வாங்க நீங்களே கடைக்குச் சென்றபோது, எந்தவொரு சிறு வேலையையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பதைக் கற்றேன்.
* நம் வீட்டு வேலைக்காரி இறந்த சமயம், அவளது மகனைத் தேற்றினீர்கள். கௌரவம் பார்க்காமல் பிறரது துயரங்களை நம்முடையதாக உணர வேண்டும் என்று உங்களிடமிருந்து கற்றேன்.
* கிராமத்திலுள்ள கோயிலுக்குச் செல்ல கட்டணத்துக்கு மேல் அதிகப் பணம் தர மறுத்தீர்கள். நல்ல வழியில்தான் பணம் செலவழிக்க வேண்டும் என்று புரிந்தது.
* அன்று மாலை களைப்பாக வீடு திரும்பினீர்கள். ஆனாலும் ஜுரத்தில் படுத்திருந்த தம்பியை மருத்துவரிடம் கூட்டிச் சென்றீர்கள். தன் நலத்தை விட பிறர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்று கற்றேன்.
* என் விருப்பப்படி பட்டப்படிப்பினை நான் விரும்பிய கல்லூரியிலேயே படிக்க அனுமதித்தீர்கள். உங்கள் எண்ணம் வேறாக இருந்தும்கூட நீங்கள் பெருந்தன்மையாக இருந்தீர்கள். நானும் அப்படி இருப்பேன்.
* எதிர்பாராமல் விருந்தாளிகள் வந்தபோதும் இன்முகத்துடன் அவர்களை வரவேற்றீர்கள். நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் அடுத்தவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றல்லவா எனக்கு உணர்த்தினீர்கள்.
அப்பா! இப்படி நீங்கள் எப்போதும் பல வழிகளில் எனக்கு வழிகாட்டி வருகிறீர்கள். நன்றி.
தந்தையிடமிருந்து கற்கக் கூடாததைக் கற்ற ஒரு மகன் கூறுகிறான்:
அப்பா, என்னைப் பெற்றவரே!
* தாமதமாக வந்த செய்தித்தாள் வினியோகிப்பவனிடம் நீங்கள் கத்திய போதுதான் பிறரிடம் கோபத்துடன் கத்தலாம் என்பதைக் கற்றேன்.
* உங்களுக்கு போன் வந்தபோது ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று கூறுமாறு தங்கையிடம் சொன்னீர்கள். தேவைப்பட்டால் பொய் கூறலாம் என்று அன்றுதான் கற்றேன்.
*குப்பைக்கூளமான பத்திரிகையை நீங்கள் படிப்பதைப் பார்த்துத்தான் நல்ல நூல்களைப் படிக்கத் தேவையில்லை என்று கற்றேன்.
* ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி வரை தூங்குவீர்கள். விடுமுறை நாட்களில் தாமதமாக எழலாம்; வேலை நாட்களையும் விடுமுறை நாளாக கருதலாம் என்று அன்று கற்றேன்.
* ஒரு விருந்துக்கு நாம் போனபோது நீங்கள் மது குடித்ததைப் பார்த்தேன். நானும் அதைக் கற்றுக் கொண்டேன்.
* இரவு திரைப்படம் பார்த்துவிட்டு, காலையில் தாமதமாக எழுந்திருப்பீர்கள். மறுநாள் பரபரப்பாகி எல்லா வேலைகளையும் தவறாகச் செய்வீர்கள். நானும் அதையே செய்கிறேன்.
* நீங்கள் தெருவில் துப்புவீர்கள். நானும் துப்புகிறேன்.
* வாழைப்பழத் தோலை நடுவீதியில் வீசுவீர்கள். பிறர் கஷ்டப்படுவார்களே என்று நானும் கவலைப்படுவதில்லை.
* நீங்களும் அம்மாவும் உரத்த வாக்குவாதம் செய்யும்போது, பிரச்சனை வந்தால் இப்படிச் சண்டை போடலாம், ஒருவரையொருவர் வசைபாடலாம் என்று கற்றேன்.
* உருளைக்கிழங்கும், வெங்காயமும் விலையேறியதும் அதற்கும் கோபப்பட்டீர்கள். இப்படி ஒரு சிறு விஷயம் கூட என்னையும் இன்று கோபப்படுத்துகிறது.
* நம் குடும்ப நிகழ்ச்சிக்கு வராமல் ஒரு பார்ட்டிக்குப் போனீர்கள். நானும் வீட்டைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் கற்றுக் கொண்டது அன்றுதான்.
* பக்கத்து வீட்டுக்காரரிடம் நீங்கள் கடுமையாகப் பேசியபோது..., நானும் பிறரிடம் கடுமையாகப் பேச ஆரம்பித்தேன்.
* ஒரு சிறு வியாபாரிக்கு நீங்கள் பணம் குறைவாகக் கொடுத்தீர்கள். எளியவர்களையும் சாதாரணமானவர்களையும் நாம் ஏமாற்றலாம் என்று கற்றேன்.
ஐயோ அப்பா, நான் எப்படி இருக்கிறேனோ, அதை உங்களிடமிருந்துதான் கற்றேன். பின் என்னை ஏன் பொல்லாதவன் என்று கூறுகிறார்கள்?
நான் தடம் மாறியதற்கு நீங்கள் சென்ற பாதையில் தடம் பதித்ததுதான் மூலகாரணம்.
நல்லதைக் கற்றவன் நல்லவனானான். அதே வேளையில் கெட்டதைக் கற்றவன் கெட்டவனாகிப் போனான்.