''டோகென்! டோகென்!...'' பதிலில்லை.
''டோகென் எங்கே? நீ அவனைப் பார்த்தாயா?''
"இல்லையே! நான் பார்க்கலையே...''
''சரி! எங்கேதான் போனான் அவன்?”
கடைசியில் அவன் இருக்கும் இடத்தைக் கண்டு, "ஓ, டோகென், நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று கூறியபடி அந்த வேலைக்காரி டோகென்னைப் பற்றிக் கொண்டு அழுதுவிட்டாள்.
''உன் கஷ்டம் எனக்கும் புரிகிறது குழந்தாய்! ஆறு மாதத்திற்கு முன்பு உன் அம்மா இறந்து விட்டாள். இன்றைக்கு...!''
அவன் மெதுவாகக் கீழே பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான்.
வேலைக்காரி, "நீ ஏன் பேசாமல் இருக்கிறாய்? அழவாவது அழேன்? இதோ பார்! அரண்மனையிலிருந்து பல உறவினர்கள் வந்திருக்கிறார்கள். வாயேன்!''
அவனது மௌனத்தைக் கண்டு அவள் மிகவும் கவலைப்பட்டாள்.
''நீ அழவில்லை என்றால் வேதனை உள்ளேயே இருக்குமப்பா! உன் அம்மா மறைந்த பின்னால் உன் அப்பாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தாய். இப்ப அவரும் போயிட்டார்...”
ஐந்து வயதுக் குழந்தையான டோகென் வாய் திறந்தான்:
''சப்பம் துக்கம்.'' (உலகம் மிகவும் சோக மயமானது, துன்பமயமானது...)
அவள் அதிர்ந்து போய்விட்டாள்.
பாலி மொழியில் இச்சொல்லை அவன் சொல்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை!
''உன் வயதிற்கு நீ நிறையவே படித்திருக்கிறாய் என்று தெரியும். வா, உன் அப்பாவின் உடல் கிடத்தியுள்ள இடத்திற்குப் போகலாம். வா குழந்தாய், எல்லோரும் உன்னைத் தேடுகிறார்கள்.''
எதுவும் டோகென்னை அசைக்கவில்லை.
நாட்கள் சென்றன.
இந்த அனாதையை அந்த பணிப்பெண் தாய்தான் கவனித்துக் கொண்டாள். ஆனாலும் அவன் உள்முகமாகவே ஆகியிருந்தான்.
அம்மா மறைந்தபோது அப்படி ஓயாமல் அழுதவன் இப்பொழுது ஏன் இப்படி மௌனமாகிவிட்டான்?
சில நாட்கள் கழித்து, அவள் அவனைப் பார்த்த போது காவியுடையில் இருந்தான்.
அதிர்ந்து போன அந்தச் செவிலித்தாய், "உன் பெற்றோர் உன்னை புஜிவாரா அமைச்சர் ஆவாய் என்று எதிர்பார்த்தனர். இந்தக் காவி உடை எதுக்கு? விளையாட்டிற்கா?'' என்று கேட்டாள்.
''இல்லை தாயே! நான் வீட்டைவிட்டுக் கிளம்புகிறேன். 'வாழ்க்கையே சோகமானது. சொந்தம், நண்பர்கள் எல்லோரும் சங்கடம்' என்றார் புத்த பகவான். நான் செல்கிறேன். சம்போதியைத் தேடிப் போகிறேன்.''
பணிப்பெண் தாய் மன்றாடினாள். எல்லோரும் சொல்லிப் பார்த்தார்கள். டோகென் உறுதியாக இருந்தான்.
அந்தப் பால துறவி எல்லாவற்றையும் விட்டு விலகிச் சென்றான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, டோகென் தன் நாடான ஜப்பானுக்கு டோகென்ஜென் மதத்தைக் கொண்டு வந்து, தன் பெற்றோரின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டான்!
ஆம், டோகென் டோகன் ஜென் ஆனதுடன் ஜப்பானின் ஆன்மிக அரசனாகவும் ஆகிவிட்டான்.