காஷ்மீர மன்னன் ஒரே மாதிரியான மூன்று பொம்மைகளை அக்பருக்கு அனுப்பி வைத்தான்.
கூடவே மூன்றுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்கிற துண்டுச் சீட்டு ஒன்றும் இணைத்திருந்தான்.
அரசசபையிலிருந்த அத்தனை பேரும் அந்த மூன்று பொம்மைகளைப் பார்த்தனர். ஒரு வித்தியாசம் கூட இல்லாமல் மூன்றும் ஒன்றாக இருப்பதாகவே தோன்றியது.
அந்த மூன்று பொம்மைகளையும் அந்தக் குறிப்பையும் பீர்பாலிடம் கொடுத்தார் அக்பர்.
பீர்பாலும் மூன்று பொம்மைகளையும் நன்றாகப் பார்த்தார். பிறகு ஒரு குச்சி எடுத்து வரச் செய்தார். பொம்மைகலின் காதில் விட்டுக் காட்டினார்.
ஒரு பொம்மைக்கு குச்சி மறு காது வழியாக வந்தது. மற்றொன்றுக்கு வாய் வழியாக வந்தது. மூன்றாவதுக்கு குச்சி வெளிப்படவேயில்லை.
" அரசே, காதில் கேட்பதையெல்லாம் பிறரிடம் சொல்லிவிடும் பொம்மை வம்புக்கார பொம்மை. இது மிகவும் மட்டமானது. ஒரு காது வழியாக உள்ளே போகும் விஷயத்தை மறு காது வழியாக வெளியிடும் பொம்மை அலட்சியமும் அசிரத்தையும் கொண்ட பொறுப்பற்ற பொம்மை. காதில் வாங்கும் விஷயத்தை வம்பளக்காமல் மனதில் தங்க வைத்து அசை போட்டு அதிலிருந்து அனுபவத்தைப் பெறும் பொம்மை முதல் தரம்" என்றார் பீர்பால்.
எல்லோரும் பொம்மையைப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை பீர்பால் கண்டு பிடித்தார்.
மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும் எந்த விஷயமும் தெரிவதில்லை. நுணுக்கமான அறிவுடையவர்களால்தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.