ஒரு விவசாயி விதைக்கப் போனான்.
அவன் விதைகளைத் தூவிய போது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை அனைத்தையும் தின்று விட்டன.
சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் உதித்ததும் அவை கருகிப் போயின. ஆழமான வேர் இல்லாததால் அச்செடிகள் காய்ந்தன.
இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையே விழுந்தன. களைகள் முளைத்து அந்த செடியின் விதைகள் வளராமல் தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும், சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன.
இங்கே விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்.
சாலையின் ஓரத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்து கொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனத்தில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்து கொள்கிறான். பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக் கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும் பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான்.
முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்க்கையின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.
ஆனால் நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, நூறு மடங்கும், சில சமயம் அறுபது மடங்கும், சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்.