ஒரு காட்டில் மரங்கொத்திப் பறவை ஒன்று தன் கூரிய அலகால் "டொக்.டொக்" என்று மரத்தைக் கொத்தியபடியே மேலே தாவித்தாவி ஏறியது.
அதைப் பார்த்த ஒருவன்,"ஏய் மூடப்பறவையே, எதற்காக இப்படி மரம் முழுக்கக் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையில்லையா?" என்று கேட்டான்.
"அட மனிதனே! நான் எனக்குத் தேவையான உணவைத் தேடுகிறேன். எதுவும் தேடினால் கிடைக்கும்" என்று கூறியது மரங்கொத்திப் பறவை.
அதற்காக "மரம் முழுவதும் கொத்துவது மடத்தனம்" என்றான் அவன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மரங்கொத்திப் பறவை மரத்திலுள்ள ஒரு போரையைக் கண்டுபிடித்தது.
அது தன் அலகால் குத்திப் பெயர்த்துப் போரைக்குள் குடியிருந்த புழுக்களைக் கொத்தித் தின்றது.
அதன் பிறகு மரங்கொத்திப் பறவை, "மனிதனே நீயும் தேடு, மரத்திலும், மண்ணிலும், நீரிலும், ஏன் எல்லா இடத்திலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்." என்றது.
மனிதனுக்கும் விடாமுயற்சிக்கு சிறந்த பலன் கிடைக்கும் என்கிற விடையும் கிடைத்தது.