வேதங்கள் எல்லாம் நன்கு கற்றவர் உத்தாலகர். அவருடைய பெண்ணின் பெயர் சுஜாதா. உத்தாலகருக்கு பல சீடர்கள். அதில் ககோளரும் ஒருவர். அவருக்கு மனப் பாடமும் வராது, திருத்தமாக சுலோகங்களைச் சொல்லவும் வராது. தப்பும் தவறுமாய்ச் சொல்லி உடன் பயிலும் சீடர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாவது அவரது இயல்பு. ஆயின் குருவிடம் ஆத்மார்த்த அன்பும் மரியாதையும் பக்தியும் உடையவர். குருசேவையில் ஒழுக்கத்துடன் நியம நிஷ்டைகளைக் காலம் தவறாமல் செய்தவர். அதனால் மகிழ்ந்த உத்தாலகர் தன் மகள் சுஜாதாவை அவருக்கு திருமணம் செய்வித்தார். அவள் கருவுற்றாள்.
ககோளர் தப்பும் தவறுமாக சுலோகம் சொல்வதைக் கேட்டு தாயின் வயிற்றினுள் உள்ள குழந்தை உடலை முறுக்கிக் கொள்ளுமாம். அவ்வாறு எட்டு முறை நேர்ந்ததனால் குழந்தை எட்டு கோணல்களுடன் பிறந்தது. அதனால் அனைவரும் அக்குழந்தையை அஷ்டா வக்ரன் என்றே அழைக்கலாயினர். உடலில் தான் கோணலே தவிர மனதில் கோணல் இல்லாத உத்தமபுத்திரன் அவன். பன்னிரண்டு வயதுக்குள் அக்கால வழக்கப்படி வேத வேதாந்தங்களையும், புராண இதிகாசங்களையும் கற்று வித்துவப் புகழ் அடைந்தான்.
மிதிலை மகாமன்னர் ஜனகர் அரண்மனையில் அமர்ந்து தர்பாரில் அதிகாரிகளுடன் அரசாங்கப் பணியினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது சோர்வின் காரணமாய் சற்றே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது ஒரு கனவு.
நாடு நகரம், மக்கள், உறவு, பொருட்கள் அனைத்தையும் ஒருசேர இழந்து, உண்ண உணவின்றி, உடுத்திய உடையுடன் பலரிடம் இரந்து, யாரோ கொடுத்த சிறிய ஒரு பதார்த்தை யார் கண்ணிலும் காட்டாது ஒதுக்கமாக நின்று கொண்டு உண்ன முயன்றாராம். எங்கிருந்தோ பறந்து வந்த வல்லூறு அதையும் தட்டிப் பறித்துச் சென்றது. கண்விழித்து தன் பகற்கனவைப் பிறரிடம் கூறி விளக்கம் கேட்டார். விடை கிடைக்கவில்லை.
மிதிலையில் வந்தி என்னும் பெயருடைய கொடியகுணம் படைத்த வித்துவான்,தன்னை மிஞ்சி எவரும் மேலே வந்துவிடக் கூடாது என்ற நோக்கோடு வம்படியாக பிறரை வாதுக்கு அழைத்து, தோற்கடித்து சாகும் வரை கடலில் மூழ்கடித்துக் கொன்று விடுவான்.
உத்தாலகர் மறைந்த பின்னர் கோளகர் பொன் பொருளுக்கு ஆசைப்பட்டு வந்தியிடம் வாதிடச் சென்று இனிய உயிரை விட்டார்.
தந்தை இறந்த விவரத்தை தாயின் மூலம் அறிந்த அஷ்டா வக்ரன் தனது அக்காள் மகன் சுவேதகேதுவுடன் வந்தியை எதிர்நோக்கப் புறப்பட்டான்.
அப்போது மிதிலையில் ஜனகர் ஒரு பெரிய யாகம் நடத்திக் கொண்டிருந்தார். தினம் தினம் யாகம் முடிந்ததும் பண்டிதர்கள் வேதாந்தச் சர்ச்சை செய்வார்கள்.
அஷ்டாவக்ரன் காலைச் சாய்த்து மெதுவாக நடப்பான். மிதிலையை நெருங்கி விட்டனர் அப்போது ''பராக்.... பராக்... வழிவிடுங்கள் ராஜா வருகிறார்'' என்று கட்டியம் கூறிக் கொண்டு காவலர் முன்னே வந்தனர். அரசர் நெருங்கி வந்து விட்டதால் சிறுவனை அதட்டினர்.
அஷ்டாவக்ரன் பேசினான், "உடல் ஊனமுற்றவர்களுக்கும், கர்ப்பிணி, வயோதிகர்களுக்கும், சுமை தூக்கிக் கொண்டு செல்பவர்களுக்கும் வழிவிட்டு அரசனும் தாமதித்துச் செல்ல வேண்டும் என நீதி நூல்கள் சொல்கின்றன. இல்லறத் துறவி எனப் புகழ் பெற்றிருக்கும் உங்கள் ஜனக மகாராஜா இதைப் படித்ததில்லையா?" என்று கேட்டான்.
அருகில் இதைக் கேட்டுக் கொண்டே வந்த ஜனகர் "இந்தப் பையன் சொல்வது சரிதான், நெருப்பில் சிறியது பெரியது உண்டோ? இவன் வேதாந்தப் பொறி போலும்" என்றபடி வேறு வழியாய்ச் சென்று யாக சாலையை அடைந்தார்.
யாகசாலையிலும் அஷ்டா வக்ரனை உள்ளே விட மறுத்தனர் காவலர்.
"யாக சாலையில் நுழைய எதைத் தகுதி என்கிறீர்கள்? வயதையா, செல்வத்தையா அறிவையா, நற்குடிப் பிறப்பையா, கல்வியையா, நற்குணங்கள் கொண்டவ ரென்பதையா, பெரிய இடத்து சினே கத்தையா ?
எங்களுக்கு தலை நரைக்கவில்லை .. கண் பஞ்சடையவில்லை.. காது செவிடாகவில்லை.. பற்கள் விழவில்லை.. நாங்கள் செல்வந்தர் இல்லை.. உறவினர்கள் எங்களுக்கு இல்லை.. அரசாங்கத்தில் வேண்டியவரெவரும் பதவி வகிக்கவில்லை.
வேத விற்பன்னரான உத்தான பாதரின் பேரன்கள் நாங்கள்... அறிவை சோதித்து அறிந்துகொள்ளுங்கள். நற்குணங்களைப் பழகித்தான் அறிய முடியும். பெரிய தராசாகயிருக்கலாம். அது இரும்பைத் தான் எடை போடும். தங்கத்தை எடைபோட சிறிய தராசு போதும். கடப்பாரையால் மண்ணைத் தான் தோண்ட முடியும் . துணியைத் தைப்பதற்கு ஊசியால்தான் முடியும். வயதையும் தோற்றத்தையும் வைத்து ஒருவரையும் சிறியவன் என்று முடிவுகட்டக் கூடாது" என்றான் அஷ்டாவக்ரன்.
"நில்... நீ தற்புகழ்ச்சி பேசுகிறாய். இதற்குள் நீ வேத வேதாந்தங்களையும் உபநிடதங்களையும் கற்றிருப்பாய் என்பதை என்னால் நம்பமுடியவில்லை " என்றான் காவலாளி.
"அகத்தியர் உருவில் சிறியவர்.. கடலையே உண்டு உமிழ்ந்தவர். உன்னால் அவ்வாறு செய்ய முடியுமா? இலவங்காய் பருத்து இருக்கும். உடைத்தால் மெத்து மெத்தென்று பஞ்சு பஞ்சாய் இருக்கும். ஒதிய மரங்கள் பருத்திருக்கும். ஆனால் உறுதியில்லாததால் மர வேலைக்கு எடுக்க மாட்டார்கள். யானைக்காலுள்ளவன் வேகமாக ஓட முடியாது. துருவன் ஐந்து மாதம் தவமிரூந்து திருமாலைத் தரிசித்து விண்ணில் ஒளிவெள்ளியாகி விட்டான். ஞானிகளும் தவசிகளும் காலங்காலமாய் தவம் செய்து காத்திருக்க, பிரகலாதன் பக்திக்காக அரை நிமிடத்தில் தூணிலிருந்து நரசிம்மமாக வெளிவந்தார் விஷ்ணு. வயதை வைத்து அறிவை எடை போட வேண்டாம்" என்றான் அஷ்டாவக்ரன்.
மறைவிலிருந்து இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனகர் வந்தார்.
"பாதையிலூம் சரி, இங்கும் சரி உன் பேச்சில் அறிவு முதிர்ச்சியையும், திறமையையும் கண்டேன். யாக சாலையில் வேதாந்த விவாதம் நடக்கப் போகிறது. அதற்கு உன் பாண்டித்யம் போதாது. வெம்பிப் பழுக்காமல் விளைந்தபின் வெளிப்படுவது நல்லதல்லவா?" என்றார் அரசர்.
"அரசே மாங்காய் ஊறுகாய் போட நினைப்பவன் பழங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது அறிவீனம். மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக இளநீர் குடிக்க நினைப்பவன் தேங்காய் முற்றட்டும் என்று மரத்தடியில் காத்திருப்பது அறிவுடைமையாகுமா? செடியில் மலரட்டும் என்று மல்லிகையை விட்டு வைத்தால் மாலையாகக் கட்டிக் கடவுளுக்குப் போட முடியுமா? நான் கறிகாய் வகையைச் சேர்ந்தவன். மலரும் தருணத்திலுள்ள மல்லிகை. நான் உங்கள் வித்துவான் வந்தியுடன் வாதப் போர் செய்யவே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். அனுமதி தரவேண்டும்" என்று வணக்கத்துடன் கூறினான் அஷ்டாவக்ரன்.
"சிறுவனே! வித்துவான் வந்தி பல பண்டிதர்களை வாதத்தில் தோற்கடித்துக் கொன்றிருக்கிறான். இந்தச் சின்னஞ்சிறு வயதில் அறிவுக் களஞ்சியமாய் திகழும் உன்னை நாடு இழந்துவிடுமே." என்று அஞ்சிமனம் பதைக்கிறது. என்று மன்னர் தயங்க,
"ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? இல்லற ஞானியான ஜனக மகாமன்னர் தாட்சண்யத்திற்காக வந்தியின் செயலைப் பார்த்ததுக் கொண்டு சும்மா இருக்கிறார். இல்லையேல் இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாரா! " என்று ஊர்ப்பழியைத் துடைக்கப் பரந்தாமனால் அனுப்பப்பட்ட தூதன் என்று எண்ணுங்கள்! கடலில் முத்தும், மீனும் பவளமும் கொட்டிக் கிடக்கின்றன. ஆழத்தில் சென்று தேடுபவன் கையில் முத்தும் பவளமும் கிடைக்கின்றன.
இதுவரை ஆடுகளோடு மோதி வெற்றி கண்டு வந்த வந்தி என்னும் நரி அகம்பாவத்தோடு ஊளையிடுகின்றது. வந்திருப்பது சிங்கக்குட்டி.. அஞ்சாதீர்கள்! பிதுர்க்கடன் தீர்க்க வந்த அஷ்டாவக்ரனுக்கு வித்தையிலும் வாக்கு வன்மையிலும் கோணல் இல்லை" என அழுத்தம் திருத்தமாக சொன்ன பிறகு மறுத்துக்கூற ஜனகரிடம் எந்த உபாயமும் இல்லை. அஷ்டாவக்கிறனும் வந்தியும் சொற்போற் நடத்தினர்.
வந்தியின் கேள்விகளுக்கெல்லாம் அஷ்டா வக்ரன் தெளிவாகப் "பளிச் பளிச்" சென்று பதில் சொல்ல, அஷ்டாவக்ரனின் முதற் கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான் வந்தி.
வந்தி தோற்றுப் போனதாக சபையோர் தீர்ப்பளித்தனர். அஷ்டாவக்ரனுக்கு ஏராளமான பரிசுகள் அளித்து பேரசர் ஜனகர் கௌரவித்தார். நத்தையின் வயிற்றிலும் சிப்பிக்குள்ளும் முத்து பிறக்கிறது. சேற்றில் செந்தாமரை வளர்கிறது.
அரசரின் கனவிற்கு ஆன பதிலாக அஷ்டாவக்ரன் கூறிய மொழிகளே "அஷ்டாவக்கிர கீதை" என்று போற்றப்படுகின்றது.