ஒரு காட்டில் ஒரு சிங்கத் தம்பதிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு இரண்டு குட்டிகள்.
ஆண் சிங்கம் இரை தேடிக் கொண்டு வரும். பெண் சிங்கம் குட்டிகளை அங்குமிங்கும் அலையவிடாமல் பேணிக் காக்கும்.
ஒருநாள் ஆண் சிங்கத்துக்கு இரை அகப்படவில்லை. வரும் வழியில் ஒரு நரிக்குட்டி கண்ணில் படவே அதைக் கவ்விக் கொண்டு வீட்டிற்கு வந்தது.
இதைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை." என்றது ஆண்சிங்கம். ஆனால் பெண் சிங்கமோ அந்த நரிக்குட்டி மிகமிகச் சிறியதாய் இருந்ததால் அதைக் கொன்று இரையாக்குவதற்குப் பதிலாக இரண்டோடு மூன்றாய் வளர்க்க ஆரம்பித்தது.
குட்டிகள் மூன்றும் ஓரளவு வளர்ந்தன. காட்டுப் பகுதியில் சுற்றவும் தொடங்கின.
ஒருநாள் அப்படிச் சென்றபோது ஒரு யானை அவைகளின் எதிரே வந்தது.
அதைப் பார்த்ததும் நரிக்குட்டி "அய்யய்யோ! இதன் கிட்டே போகவே கூடாது" என்று வீட்டிற்கு ஓடி வந்து விட்டது.
சிங்கக் குட்டிகளுக்கு அதன் செய்கை எரிச்சலூட்டியது. உடனே வீட்டுக்கு வந்து தாயிடம் நரி நடந்து கொண்ட விதத்தைக் கூறின.
தன்னைப் பற்றிப் புகார் கூறப்படுவதைக் கண்ட நரிக்குட்டி கோபத்துடன் "நான் இவர்களினும் சௌகரியத்தில் குறைந்தவனா? இவர்கள் என்னைப் பழித்துக் கேலி செய்வதேன்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? நான் இவர்களைத் தண்டித்து என் பராக்கிரமத்தைக் காட்டுவேன். கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?" என்று உரத்த குரலில் மிரட்டியது.
பார்த்தது பெண் சிங்கம். இனி ஒத்து வராது என்றுணர்ந்த அது அந்த நரிக்குட்டியைத் தனியாக அழைத்துச் சென்று "நீ நரிக்குட்டி. உன் குலத்தில் யானைகளைக் கொல்கிற சக்தி இல்லை. உன்னை நான் எடுத்து வளர்த்ததால் நீ இப்படி வீரம் பேசுகிறாய். இவர்கள் உன்னை இன்னாரென்று அறியும் முன்னே நீ ஒடிப் போய்விடு. இல்லாவிட்டால் அவர்கள் கையில் அடிபட்டு இறந்து போவாய்" என்று எச்சரித்தது.
அவ்வளவுதான் அடுத்த நிமிடம் அந்த நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.