கிருஷ்ண தேவராயர் ஒரு முறை பக்கத்து நாட்டுக்குப் படையெடுத்து சென்றார்.
அப்போது ஆறு ஒன்று குறுக்கிட்டது.
ஆற்றைக் கடக்க முயன்ற போது அரசவை ஜோதிடர், "மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கட்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்." என்றார்.
கிருஷ்ண தேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கால தாமதமானால் எதிரி உஷாராகி விடுவான். அவன் எதிர்பாராத சமயத்தில் தாக்கினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால் ஜோதிடர் சொன்னதால் தோல்வி வந்து விடுமோ என்கிற அச்சம் வந்து விட்டது.
தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோதிடரை அழைத்தான். “எல்லோருக்கும் ஜோதிடம் சொல்கிறீர்களே, உங்களின் ஆயுள்காலம் எவ்வளவு என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
“தாராளமாக, நான் இன்னும் இருபது வருடங்கள் உயிருடன் இருப்பேன்.” என்றார் ஜோதிடர்.
தெனாலிராமன் தன்னுடைய வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த வினாடியே உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்க என்னால் முடியுமா? முடியாதா? " என்று கேட்டான்.
ஜோதிடரின் விழிகள் அச்சத்தால் பிதுங்கின. “ முடியும்... முடியும்... " என்று அலறினார்.
இவ்வளவுதான் மன்னா ஜோதிடம். உங்களுக்கு எதிரான எந்த ஜோதிடத்தையும் என்னால் பொய்யாக்க முடியும். " என்றபடி புன்னகைத்தான். தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். வெற்றி பெற்று திரும்பினார்.
எந்த செயலிலும் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கையும், உறுதியும்தான் தேவை. மூட நம்பிக்கையான ஜோதிடம் வெற்றியை வாங்கித் தர முடியாது.