ஒருவருக்கு இன்பம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆசை ஏற்பட்டது. நேராக துறவி ஒருவரை பார்க்கச் சென்றார்.
"சாமி! இன்பம், இன்பம் என்று சொல்கிறார்களே, அது எங்கே இருக்கிறது என்பதை சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த துறவி, "என்னைப் பார்க்க எப்படி வந்தாய்? கால்நடையாகவா? அல்லது வாகனத்திலா?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "நடந்துதான் வந்தேன்" என்றார்.
"மீண்டும் வந்த வழியிலேயே நடந்து செல். வரும் போது எதையெல்லாம் கவனிக்காமல் வந்தாயோ, அதை நன்றாகக் கவனித்து விட்டுச் செல். இன்பம் எங்கே இருக்கிறது என்பது உனக்கே தெரிந்துவிடும்" என்றார்.
அவரும் "சரி" என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
"இன்பம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாரே" என்று புலம்பியபடி நடையைத் தொடர்ந்தார்.
"இருந்தாலும், துறவி சொன்னபடி பார்த்துக் கொண்டுதான் போவோமே" என்று, செல்லும் வழியில் உள்ள காட்சிகளைப் பார்வையால் அலசினார்.
அவருக்கு எதிரில் இரு சின்ன வயது குழந்தைகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள், கையில் ஆளுக்கு ஒன்றாக ஐஸ்கிரீம் வைத்திருந்தனர். திடீரென்று ஒரு குழந்தை வைத்திருந்த ஐஸ்கிரீம் கீழே விழுந்து விட்டது. உடனே அது அழ ஆரம்பித்து விட்டது. இன்னொரு குழந்தை, தான் வைத்திருந்த ஐஸ்கிரீமை அந்த குழந்தையிடம் கொடுத்தது. அழுத குழந்தை உடனே அழுகையை நிறுத்தி, ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டது. அதை சப்பிச் சாப்பிட்டது. அழுகை நின்றதால் அந்த குழந்தையின் முகத்தில் ஒருவித இன்பம் தென்பட்டது. அதனால் அது மகிழ்ச்சியாக சிரித்தது.
சின்ன வயதிலேயே விட்டுக் கொடுக்கும் பழக்கத்தை அந்த குழந்தைகளிடம் பார்த்த அவர் தன்னை அறியாமலேயே மெய்சிலிர்த்துப் போனார்.
அவர் நடந்து சென்று கொண்டிருந்த நேரம் மதிய வேளை என்பதால் களைப்பு அதிகமாகியது. வியர்த்தும் கொட்டியது.
அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கினார். அவரது பார்வையில் ஒரு இருக்கை தென்பட அதில் அமர்ந்து கொண்டார். தாகம் அதிகமாக இருந்ததால் சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு குடிநீர் குழாய் தென்பட்டது. அதைத் திறந்து தண்ணீரை குடித்தார். களைப்பு எல்லாம் பறந்து போனது போல் இருந்தது.
மரத்தின் நிழலுக்கும், மெல்ல வந்து மோதிய குளிர்ந்த காற்றுக்கும் அந்த மரத்தடியில் சிறிது நேரம் படுத்து விடலாம் போல் இருந்தது அவருக்கு! ஒருவித இன்பம் அவரை தழுவிச் சென்றது.
உடனே, மரத்தடியில் அமர்ந்தார். அப்போது, பறவைகளில் கீச்சுக்குரல் கேட்டு மரத்தின் கிளையை எட்டிப் பார்த்தார். அங்கே இரண்டு பறவைகள் தங்கள் அலகுகளால் மாறி மாறி தீண்டி விளையாடிக் கொண்டிருந்தன.
அந்தக் காட்சியை பார்த்த மாத்திரத்தில் அவருக்குள்ளும் ஒருவித சிலிர்ப்பு எட்டிப் பார்த்தது. கூடவே, இன்பம் எங்கெல்லாம் இருக்கிறது என்பதும் புரிந்தது.
ஆம்! இறைவன் எங்கும் நிறைந்திருப்பதாக நாம் சொல்வதுபோல் இன்பமும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. நாம்தான் அது இருக்கும் இடம் தெரியாமல் எங்கேயெல்லாமோ தேடுகிறோம்...