அந்த தாய்க்கு அவன் ஒரே மகன். அவன் ஒரு தாசியிடம் மனதை பறி கொடுத்து விட்டான். அவளை தேடிச் சென்று, தேடிச் சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்தான்.
அவனிடம் இனி பணம் எதுவும் இல்லை என்கிற நிலை வந்த போது, அந்த தாசி அவனை எட்டிப் பார்க்கவே மறுத்து விட்டாள்.
ஒருநாள், "உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை" என்று அவள் காலிலேயே விழுந்துவிட்டான். "உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்! ஆனால், என்னை வர வேண்டாம் என்று மட்டும் சொல்லிவிடாதே" என்றும் கெஞ்சினான்.
அந்த தாசிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் கேலியாக சிரித்துக் கொண்டே, "உன் தாயின் இதயம் எனக்கு வேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.
காமத்தின் மயக்கத்தில் சிக்கியிருந்த அவன், "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றான்.
"அம்மா! அவள் என்றால் எனக்கு உயிர் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு கொடுக்க இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை. உன் இதயம் வேண்டும் என்று கேட்கிறாள். நீ அதை எனக்கு கொடுப்பாயா? அவளை பார்க்காமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என்று கூறி அழுதான்.
எந்த தாய்தான் மகன் கேட்டால், இல்லை என்று சொல்வாள்? உடனே அவள், "மகனே! என் இதயத்தை கொடுத்தால் அவள் உன்னுடனேயே இருப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இருப்பாள்" என்றான்.
அந்தத் தாயும், தன்னை கொன்று இதயத்தை வெட்டி எடுத்துக் கொள்ளும்படி கூறினாள். அதன்படி, அந்த அன்பான தாயை கொன்ற அவன், தாசி கேட்டவாறு இதயத்தையும் தனியாக வெட்டியெடுத்தான்.
வலது கையில் அதை ஏந்தியபடி, தனது அன்புக்குரிய தாசி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். செல்லும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். கையில் இருந்த தாயின் இதயமும் கீழே விழுந்தது.
அந்த இதயம், கீழே விழுந்த அவனைப் பார்த்து, "மகனே வலிக்கிறதா? நான் உயிரோடு இருந்தால் உன் காயத்திற்கு மருத்துவம் பார்த்து இருப்பேனே?" என்றது.
"இப்படிப்பட்ட தாயையா எவளோ ஒருத்திக்காக வெட்டிக் கொன்றேன்?" என்று அப்போது அலறிய அவன், அங்கேயே உயிர் விட்டான்.
- தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.