இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.
சிவனடியாரான இவர் இறைவனைக் காண கைலாயத்திற்கு பேய் உருவில் தலை கீழாக நடந்து சென்றார். பார்வதி தேவி இந்த காட்சியை பார்த்து புருவங்கள் விரித்தார்.
"சுவாமி, இந்தக் கோலத்தில் வரும் இந்த பெண் யார்?" என்று சிவபெருமானை பார்த்துக் கேட்கிறார்.
"பார்வதி... உனக்கும், எனக்கும் அம்மை வருகிறாள்" என்கிறார் சிவபெருமான்.
இறைவன் தன்னை "அம்மையே..." என்று அழைத்ததால் தனது ஆனந்த கண்ணீர் வழிந்தோடு இறைவனை தரிசித்தார்.
"அம்மா... உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று வலிய கேட்ட இறைவனிடம், "மீண்டும் பிறவாமை வேண்டும்; மீறிப் பிறந்தால் உம்மை மறவாமை வேண்டும்" என்று கேட்டு, இறைவனையே மெய்சிலிர்க்க வைத்த பெருமைக்குரியவர் இந்த காரைக்கால் அம்மையார்.
இல்லற வாழ்க்கையில் ஆனந்தமாய் ஈடுபட்ட இந்த அம்மையார் எப்படி சிவனடியார் ஆனார்? கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் நடந்த அந்த வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.
சோழ நாட்டில் உள்ள கடற்கரைத் துறைமுகப் பட்டிணமான காரைக்காலில் தனதத்தன் என்ற செல்வந்த வணிகனுக்கு ஒரே மகளாய் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் புனிதவதி. சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் புனிதவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது.
காரைக்கால் அருகே உள்ள மற்றொரு துறைமுகப் பட்டிணமான நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற செல்வந்த செட்டியாரின் மகனான பரமதத்தனுக்கு புனிதவதியை திருமணம் செய்து வைத்தனர்.
புதுமணத் தம்பதியர் காரைக்காலில் புதிய மாளிகை ஒன்றில் குடியேறினர். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும் புனிதவதியிடம் இருந்த சிவபக்தி சற்றும் குறையவில்லை. இதனால், அவரை சிவனாடியார்கள் பலர் தேடி வருவது உண்டு. அவ்வாறு வரும் அடியார்களுக்கு தலை வாழை இலையில் உணவு படைப்பார்.
ஒரு நாள் கணவன் பரமதத்தன் வியாபாரத்திற்கு புறப்பட்டு விட்டான். வீட்டில் புனிதவதி மட்டும் இருந்தார். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அன்று காலையில் நண்பர் ஒருவர் கொடுத்த 2 மாங்கனிகளை பணியாள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான் பரமதத்தன். அதை பெற்றுக் கொண்ட புனிதவதி, வீட்டிற்கு அன்று வந்த சிவனடியார் ஒருவருக்கு இரண்டு பழங்களில் ஒன்றை உண்ணக் கொடுத்து விட்டார்.
மதியம் வீட்டிற்குச் சாப்பிட வந்த பரமதத்தனுக்கு சாப்பாட்டுடன் மீதம் இருந்த ஒரு மாங்கனியை வைத்தார். அதை உண்ட பரமதத்தனுக்கு போதும் என்ற திருப்தி வரவில்லை. மற்றொரு மாம்பழத்தைக் கொண்டு வர மனைவியை பணித்தான்.
வீட்டு அறைக்குள் சென்ற புனிதவதி என்ன செய்வது என்று தெரியாது இறைவனை வேண்ட, அவரது கையில் இறைவன் அருளால் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அந்தப் பழத்தை கணவனிடம் உண்ணக் கொடுத்தார்.
அதை உண்ட பரமதத்தன் முகத்தில் திடீர் மாற்றம். "நான் கொடுத்த இரண்டு மாங்கனியும் ஒரே மாதிரியானவை தான். ஆனால், நீ கொடுத்த இரண்டாவது மாங்கனி மட்டும் தேவாமிர்தம் போல் இருக்கிறதே; என்ன காரணம்?" என்று கேட்டான்.
புனிதவதிக்கு பொய் சொல்ல மனமில்லை.
சிவனடியாருக்கு ஒரு பழத்தைக் கொடுத்ததையும், இறைவன் அருளால் மற்றொரு பழம் வந்ததையும் கூறினார். நம்பாத பரமதத்தன், "இரண்டாவது மாங்கனி கொடுத்த அதே இறைவனிடம் கேட்டு மற்றொரு மாங்கனியை வாங்கு பர்க்கலாம்" என்றான்.
"தாலி கட்டிய கணவனே இப்படி சோதனை செய்கிறானே" என்று எண்ணிய புனிதவதி, மனம் உருகி இறைவனை வேண்ட அவரது கையில் மேலும் ஒரு மாங்கனி தோன்றியது.
அதைக் கணவனிடம் கொடுத்தார்.
அந்த மாங்கனியை பரமதத்தன் உண்ண முற்பட்டபோது அது தானாகவே மறைந்தது. அதிசயித்துப் போய்விட்டான் பரமதத்தன்.
புனிதவதி தனது மனைவி என்பதை மறைந்து அவரைக் கையெடுத்து கும்பிட்டான். அவரைத் தெய்வமாகவே தொழுதான். நெருங்க மறுத்தான், விலகினான்.
வணிகம் செய்யும் பொருட்டு கப்பல் ஏறிச் சென்ற பரமதத்தன், பாண்டிய நாட்டில் ஒரு வணிகர் மகளை திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையானான். அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்றே பெயர் சூட்டினான். இதையறிந்த புனிதவதி பாண்டிய நாடு வந்தார்.
பரமதத்தன் தனது இரண்டாவது மனைவி, மகளுடன் அவரைப் பார்க்க சென்றான். புனிதவதியை பார்த்த மாத்திரத்தில், அவரது காலில் இரண்டாவது மனைவி, மகளுடன் விழுந்து தெய்வமாக வணங்கினான்.
கணவனுக்கு உரிய இந்த உடம்பு இப்போது அவனுக்குத் தேவையில்லை என்று ஆகிவிட்டதை உணர்ந்த புனிதவதி இறைவனை வேண்டிப் பேய் வடிவம் பெற்றார். அந்தப் பேய் வடிவத்துடன் தான், தலை கீழாக நடந்து சென்று இறைவனை தரிசித்தார். இறுதியில் தொண்டை நாட்டில் உள்ள திருவாலங்காட்டில் முக்தி பெற்றார்.
மாறாத சிவ பக்தியால் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி, புனிதவதியார் என்றும், காரைக்காலில் பிறந்ததால் காரைக்கால் அம்மையார் என்றும் அழைக்கப்படுகிறார்.