உலகில் பாராட்டுக்கு மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். மற்றவர்களின் திறமையை யார் பாராட்டுகிறார்களோ அவர்களே சிறந்த மனிதர். பாராட்டு என்பது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எந்தவித அழுக்காறுமின்றி புறப்பட வேண்டும்.
ஒரு முறை தத்துவப் பிரகாசர், கிருஷ்ண தேவராயரின் அவைக்குச் சென்றிருந்தார்.
அரசரும் தத்துவப் பிரகாசரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவைக்கு இரண்டு புலவர்கள் வந்தார்கள்.
ஒருவர் கூத்தானூரப்பன். இன்னொருவர் கோகிலம். இரண்டு புலவர்களும் அரசனைப் பற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடி முடிந்ததும் அரசர் “தத்துவப் பிரகாசரே, இவர்களின் பாடலின் தரம் எப்படி?” என்று கேட்டார்.
அதற்குப் பிரகாசர், “அரசே இருவரின் பாடலும் உப்பு சப்பானது" என்றார். புலவர்கள் இருவரும் திகைத்து நின்றனர். அரசருக்கும் ஒன்றும் புரியவில்லை.
பின்பு பிரகாசரே விளக்கமளித்தார்.
“எந்த உணவுக்கும் உப்பு இருந்தால்தான் ருசி. சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடுகிற உணவும் ருசிதானே. அதனால்தான் சொன்னேன். இருவரது பாடலும் உப்பு சப்பானது. “ என்றார்.
அதன் பிறகுதான் இரண்டு புலவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.
அரசரும் அவர்களுக்கும் பரிசளித்து அனுப்பினார்.