அந்த மலை உச்சியில் கம்பீரமாய் நின்ற மூன்று மாடி பங்களா பள்ளத்தாக்கில் தலை குனிந்து தாழ்ந்து கிடந்த ஒரு குடிசையைப் பார்த்து ஆணவக் குரலில்,” ஏய்! பிச்சைக்காரப் பயலே! உன்னைப் பார்க்கவே அசிங்கமாயிருக்குது!” என்று கத்தியது.
இந்த ஏளனக் குரலைக் கேட்ட, ஏழைக் குடிசை சற்று தலையை உயர்த்தி, “ ஓ! மாடி வீட்டு அக்கா! மலை உச்சியின் மீது நின்று பெருமையடிக்கின்றீர்களா? சற்று நிதானமாக யோசித்துக் கதையுங்கள்!” என்று பதில் அளித்தது.
“ஓ! உதவாக்கரையே! மழையில் நனைக்கும் உன்னை உன் எஜமானன் ஏசமாட்டானா? உனது பாழாய்ப் போன சிறிய குடிசையில் நிம்மதியாகத் தூங்கத்தான் வசதியிருக்குமா? என்னைப் பார்! எனது கட்டிட திடகாத்திரத்தைப் பார்! கருங்கல்! சிமெந்து -எவ்வளவு உறுதி எனது உடல் என்பது உனக்குத் தெரியாது! என்னை நாடி உல்லாசப் பிரயாணிகள் ஆசையோடு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனரே!” என்று ஆணவத்துடன் குரல் கொடுத்தது.
இவ்வாறு இரண்டும் தர்க்கம் செய்து கொண்டிருந்த வேளையிலே - சடுதியாக ஒரு புயல் காற்று வீசத்தொடங்கியது! என்றுமில்லாதவாறு காற்று சூறாவளியாக அசுர வேகத்தில் வீசி மரங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தியது! மலை உச்சியிலிருந்த மூன்று மாடிக் கட்டிடம் சூறாவளிக்கு எதிர் நிற்க முடியாது தடார் என இடிந்து விழுந்தது. அதன் கற்கள்-இடிந்த சுவர்களெல்லாம் பள்ளத்தாக்கில் வந்து வீழ்ந்தன.
புயல் தாக்குதலுக்கு அகப்படாது அமைதியாக தியானத்தில் இருந்த சிறு குடிசையின் பக்கம் கர்வம் பிடித்திருந்த மாடிக்கட்டிடத்தின் தலை-கைகள்-கால்கள்-விரல்கள் உடைந்து துண்டு துகள்களாக சிதறி விழுந்தன.
ஆணவக்காரியின் அவலநிலை கண்டு, “அகங்காரம் தாங்க முடியாதிருந்த அழகு ராணியே! உனக்கு என்ன நேரிட்டது? இப்போதாவது உனது ஆணவம் அழிந்ததா?உன் கொள்கை தவறு என்பதை உணர்ந்து கொண்டாயா?” என்று தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் குடிசை ஒரு கேள்வியை எழுப்பியது.
ஆனால் உயிர் ஊசலாடிய வேளையில் பதில்கூறமுடியாது அந்த மாடிவீட்டுச் சிதறல் தலை கவிழ்ந்தது.