பல காலங்களுக்கு முன்னால் காக்கையும் வெள்ளையாத்தான் இருந்ததாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கை அதிக தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் கூட பறந்து போகுமாம்.
சூரியபூர் நாட்டின் ராஜாவுக்கு பல வருடம் கழிச்சு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு அங்கிகா என்று பெயர் வைத்தன்ர். அங்கிகா, குழந்தைப் பருவத்திலிருந்தே அரண்மனையை விட்டு வெளியில் சென்றதில்லை. நல்ல பெரிய பிள்ளையாகி கல்யாண வயதில் அரண்மனைக்கு வெளியே விளையாடச் சென்றாள். அங்கிகா விளையாடறத பார்த்த சூரியனுக்கு அங்கிகா மேல் விருப்பம் ஏற்பட்டது. இளவரசிக்கும் சூரியனைப் பிடித்துப் போனது.
தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாள். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். இரண்டு பேர்களும் நல்ல நண்பர்களாகிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைத்தது.
சூரியன் கிட்ட வரைக்கும் காக்கை பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறைந்து போச்சாம். சாயங்காலம் ஆனவுடன் சூரியன் தூங்கப் போய்விட்டது. காக்கை சூரியன் கொடுத்த அந்தப் பையைத் தூக்கிக்கிட்டு இளவரசி இருந்த அரண்மனையை நோக்கிப் பறந்து போயிட்டு இருந்து.
வழியில் ஒரு திருமண ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தது. அந்த ஊர்வலத்தில நிறைய பழங்கள், உணவுப் பொருட்கள் எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். காக்கைக்கு அதிலிருந்து ஏதாவது உணவைச் சாப்பிடனும்னு ஆசை வந்தது. அரண்மனைக்கு போயிட்டு வந்தால் கால தாமதமாகி விடும் என்று நினைத்தபடி, அந்தப் பையை ஒரு மரத்தில மாட்டிவிட்டுத் திருமண ஊர்வலத்துடன் போனது.
மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் அந்த காக்கை வைத்துவிட்டுப் போன பையைப் பார்த்துகிட்டே இருந்தான். அந்தப் பையிலிருந்து நல்ல வாசனை வந்ததால் மரத்தில் ஏறி அந்தப் பையைத் திறந்து பார்த்தான். அந்தப் பைக்குள் சூரியன் கொடுத்து அனுப்பின பொருளையெல்லாம் பார்த்து அசந்து போனான். உடனே அந்தப் பொருள்களையெல்லாம் எல்லாம் எடுத்துக்கிட்டு மரத்திலிருந்த குப்பையை எல்லாம் அந்தப் பையில எடுத்து போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.
மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டது. அந்த பை கீழ விழுந்திருந்ததை பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு ஊகித்தது. அதற்குப் பயங்கர கோபம் வந்தது. உடனே சூரியன் காக்கையைக் கோபத்துடன் பார்க்க, வெள்ளையாக இருந்த காக்கைகள் அனைத்தும் கறுப்பாக மாறிப் போய் விட்டது. அன்றிலிருந்து பூமிக்கு அருகில் இருந்த சூரியனும் பூமி மேல கோபப்பட்டு வெகு தூரமாகப் போயிடுச்சாம்.
இப்படித்தான் காக்கை கறுப்பாகிப் போச்சு...!