ஒரு ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரியகுளம் ஒன்று இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருந்தது.
அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள் போன்றவற்றுடன் அனைத்து நீர்வாழ் இனங்களும் வாழ்ந்து வந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தன.
அந்த மூன்று மீன்களும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே செல்லும். அவைகளுக்கு எந்த பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தன.
அவைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் வேட்டைக்குச் சென்று திரும்பிய இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள். அவர்களுக்கு வேட்டையாடிய களைப்பு முகத்தில் இருந்ததால் குளத்தில் இருந்த நீரைக் கையில் அள்ளி அருந்தினார்கள்.
அப்போது சில மீன்கள் துள்ளின. இதைக் கண்ட ஒருவர் “இந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாகக் காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், நாளை இக்குளத்திற்கு வந்து வலையை விரிப்போம், கிடைக்கும் மீன்களை விற்றுப் பணம் சம்பாதிக்கலாம்” என்றார்.
அவருடன் வந்த மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.
இவர்கள் பேசுவதை கேட்ட மீன்களில் முதல் மீன் பெருங்கவலை அடைந்தது.
உடனே தன் நண்பர்களான மற்ற மீன்களிடம் கூறியது, “காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை நமக்கு பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களின் பார்வையில் பட்டு விட்டோம். இதனால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம்?”
அவை மூன்றும் யோசித்தன.
முதல் மீன் எப்போதும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்தது. அது மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்குப் போகலாம். சில காலம் போன பின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.
முதல் மீனின் நல்ல யோசனையை மற்ற இரண்டு மீன்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாகப் பயப்படுகிறாய் என்றன.
முதல் மீன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் அவை இரண்டும் கேட்கவில்லை.
முதல் மீன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுத் தான் இன்று இரவே அந்தக் குளத்தை விட்டுப் போவதாகச் சொல்லி விட்டு, இரவே தப்பி நீரோடை வழியாக வேறொரு குளத்திற்குப் போய் விட்டது.
மறு நாள் காலையில் மற்ற இரண்டு மீன்களும் கூடிப் பேசின. மீன் பிடிப்பதாகச் சொன்னவர்களைக் காணவில்லை, சும்மா பேசிக் கொண்டிருந்ததை நம்பி முதல் மீன் வேறொரு குளத்திற்குப் போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.
சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு இரண்டு மீன்களில் ஒரு மீன் “அய்யோ கடவுளே!, அந்த மீனைப் போல் நாம் முதலிலேயே இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.
ஆனால் மற்றொரு மீன் அந்தச் சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்து கொள்ளலாம்” என்றது.
இதைக்கேட்ட மீனோ கொஞ்சம் கொழு கொழு என்றிருந்தது. அதற்குப் பயம் வந்து விட்டது.
அதற்குள் மீனவர்கள் வலை வீச, பயமில்லாதிருந்த மீன் ஓடி ஒளிந்து கொண்டது. பயந்து கொண்டிருந்த மீன் மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்கப் படாதபாடு பட்டது.
இறுதியில் வலையில் மாட்டிக் கொண்ட மீனின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்தது, அவர்கள் வலையில் இருந்து அதை எடுக்க முயன்ற போது அதிலிருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பியது.
உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல், வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.
இரண்டு மீன்களும் சென்று விட்ட பின்பு, மூன்றாம் மீன் குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் போய் ஒளிந்துக் கொண்டதுடன் தான் வீரமாகத் தப்பியதை நினைத்தும் பெருமைப்பட்டது.
அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார். அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது மூன்றாம் மீனைத் தாக்கியது, மூன்றாம் மீன் தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.
சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டுக் கொன்றார்கள். அதில் இந்த மூன்றாவது மீனும் ஒன்று.
வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட முதல் மீன் ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய இரண்டாம் மீன், உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது.
வந்தபின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய மூன்றாவது மீனோ அன்றே கொல்லப்பட்டு விட்டது.
இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்குள் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.