அறிஞர் ஒருவர் சீடர்களுடன் தெரு வழியே சென்று கொண்டிருந்தார்.
அங்கே முரட்டுச் சிறுவன் ஒருவன் வருவோர் போவோர் எல்லோரையும் மோசமான சொற்களால் திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் பேசியதைக் கேட்ட அறிஞர் அங்கிருந்தவர்களிடம், “அவன் தந்தை யார்?” என விசாரித்தார்.
அதன் பிறகு அந்தச் சிறுவனின் தந்தையிடம் சென்றார்.
“நீ ஒழுங்கான வாழ்க்கை வாழவில்லை. எப்பொழுதும் மோசமான சொற்களையேப் பேசுகிறாய். இப்படியே இருந்தால் உன் வாழ்வு பாழாவதுடன் உன் மகனின் வாழ்க்கையும் பாழாய்ப் போய்விடும். திருந்த முயற்சி செய்” என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார்.
ஒரு பெரிய அறிஞர் தன் வீட்டிற்குத் தேடி வந்து அறிவுரை வழங்குகிறாரே என்று நினைத்த வன், “அய்யா, இனி நான் நல்வாழ்வு வாழ்வேன். உங்களுடைய அறிவுரைகளை பின்பற்றுவேன்” என்றான்.
அந்த அறிஞர் அங்கிருந்து புறப்பட்டார்.
அறிஞரின் செயல்பாட்டைக் கண்ட அவரது சீடன் ஒருவன், “அய்யா, அந்த முரட்டுச் சிறுவன் மோசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தான். அவனை விட்டுவிட்டு அவனுடைய தந்தைக்கு அறிவுரை சொல்லி, அவரைத் திருத்த முயற்சிக்கிறீர்களே...? இது சரியா?” என்று கேட்டான்.
“குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் பார்த்தே பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரிடம் நற்பண்புகள் இல்லையானால், அவர்களது குழந்தைகளிடம் அவற்றை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் பெற்றோரைத் திருத்த முயற்சித்தேன்” என்றார் அவர்.