உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது.
கட்டை விரல் “எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது.
நடுவிரல் “இல்லை! இல்லை!! மற்ற விரல்களை விட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன்” என்று தன்னை உயர்த்திச் சொன்னது .
இரண்டாவது விரலான மோதிர விரல் “மனிதன் விரல்களில் அழகுபடுத்த, அணிகலனான மோதிரத்தை எனக்கு அணிவிப்பதால் நான் தான் மதிப்புடையவன்” என்றது.
சுண்டு விரல் “கைகளில் இருக்கும் விரல்களில் சிறியவனான என் மீதுதான் அனைவரும் பாசம் காட்டுகிறார்கள். விரல்களின் செல்லப்பிள்ளையும் நான்தான்” என்றது.
நான்காவது விரலான ஆள்காட்டி விரல் மட்டும் தனக்கு எதைச் சொல்வது என்று தெரியாமல் விழ்த்துக் கொண்டிருந்தது.
கடைசியாக விரல்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் உள்ளங்கையையேக் கேட்டுவிட முடிவு செய்தன.
அவர்கள் பிரச்சனைக்கு உள்ளங்கை முடிவு சொல்லியது. எப்படி?
“நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் நான்காவது விரலான ஆள்காட்டி விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் “அதோ வழி” என வழிகாட்டி உதவுகிறது. பிறருக்கு உதவும் பண்பினைக் கொண்ட ஆள்காட்டி விரல்தான் உங்களில் உயர்வானது. சிறப்பானது எனவே அதுக்குத்தான் முதலிடம்”