ஒருநாள் அக்பர் அவையில் உள்ள அறிஞர்களிடம், “நான் பெரியவனா? கடவுள் பெரியவரா?” என்று கேட்டார்.
அக்பரை விட கடவுள் பெரியவர் என்று உண்மையைச் சொன்னால் மன்னனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என நினைத்து அவையிலிருந்த பலரும் அமைதியாக இருந்தனர்.
அக்பர் பீர்பாலை நோக்கி, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார்.
“இதிலென்ன சந்தேகம் மன்னா! கடவுளை விடத் தாங்கள்தான் பெரியவர். நீங்கள் நினைத்தால் என்னை நாடு கடத்தி விடலாம். கடவுள் நினைத்தாலும் என்னை நாட்டை விட்டு விரட்ட முடியாது” என்று பதிலளித்தார்.
அக்பர் மகிழ்ச்சியோடு, “எப்படி? விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார்.
பீர்பால் அமைதியாக, “மன்னா! உங்கள் ஆட்சியின் எல்லை குறுகியது. அதனால் ஒருவனை அடுத்த நாட்டுக்கு விரட்டி விடலாம். ஆனால், கடவுளின் ஆளுகையோ அண்ட சராசரங்களிலும் வியாபித்துள்ளது. அவர் எங்கு விரட்டினாலும் அவருடைய ஆளுகையிலுள்ள பகுதிகளில்தானே சுற்றிக் கொண்டிருக்க முடியும்” என்றார்.
பீர்பாலின் மதிநுட்பத்தை அனைவரும் பாராட்டினர்.