யார் பெரியவர்?
பெண் எலி ஒன்று திருமணப் பருவம் அடைந்தது.
தன் இனத்தைப் போல ஓர் ஆண் எலியை மணந்து கொள்ள அந்தப் பெண் எலிக்குப் பிடிக்கவில்லை.
முனிவர் ஒருவரிடம் போய் தன் வேண்டுதலைச் சொன்னது. அவரது ஆசியினால் அந்த எலி, அழகிய மனிதப் பெண்ணாக உருமாறியது.
ஆசிரமத்துத் தோட்டக்காரனைப் பார்த்து மயங்கியது. அவனை மணக்க விரும்பியது.
அவனோ ஒரு மர வியாபாரியைப் பார்த்து வணங்குவது கண்டு வியாபாரியே மேல் என நினைத்தது.
வியாபாரி அரசனை வணங்க, அரசன் ஒரு சந்நியாசியை வணங்கினார்.
அதோடு பலர், சந்தியாசியைப் பணிவதையும் கண்டது. எனவே சந்நியாசியை மணக்க விரும்பி அவரைப் பின் தொடர்ந்தது.
ஆலயம் ஒன்றினுள் நுழைந்த சந்நியாசி, அங்கிருந்த சிவலிங்கத் திருமேனியை விழுந்து பணிந்து வணங்கினார்.
எலிப் பெண், சிவலிங்கத்தை எப்படி மணந்து கொள்வது என யோசிக்கத் தொடங்கியது.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த ஓர் ஆண் எலி சிவலிங்கத்தின் மீது ஏறி விளையாட ‘அட’ இதுதான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது” என்று நினைத்தது.
சாமியாரிடம் ஓடி, மீண்டும் எலியாக மாற்ற வேண்டியது.
பின்னர் அது ஒரு ஆண் எலியை மணந்து கொண்டது.
- பக்தி இலக்கியம் ஒன்றிலிருந்து...
தொகுப்பு: கீர்த்திகா முனியசாமி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.