சத்ரபதி சாகு என்பவர் மகாராஷ்டிர மாநிலம் கோஹல்பூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்தார்.
ஒருநாள் அவரது அரசவைக்கு அவருடைய சேவகர்கள் வயதான பெண் ஒருத்தியை அழைத்து வந்தார்கள்.
அவர்கள், “இந்தப் பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். இவள் உயர்சாதிக்காரர்கள் தண்ணீர் எடுக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தாள். நாங்கள் அவளைக் கையும் களவுமாகத் தண்ணீர்க் குடத்துடன் பிடித்து வந்திருக்கிறோம். இவளுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினார்கள்.
அரசருக்கு தாழ்த்தப்பட்ட பெண் என்கிற பாகுபாடு பிடிக்கவில்லை. சேவகர்களுக்கு தகுந்த புத்தி புகட்ட வேண்டுமென்று விரும்பினார்.
அவர் ஒன்றும் பேசாமல் இருமுவது போல் நடித்து, “தண்ணீர்! தண்ணீர்!!” என்றார்.
வீரர்கள் அரசரைக் கண்டு பயந்து போய் விட்டனர். அவர்கள் அவசர அவசரமாக, அந்தப் பெண்ணின் குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அரசனிடம் கொடுத்தார்கள்.
அந்தத் தண்ணீரைக் குடித்ததும் அரசருக்கு இருமல் நின்று போனது.
அதன் பிறகு அரசர், “உயர்சாதிக்காரர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்ததற்காக இவளைக் குற்றவாளி என்று இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். தண்டிக்க வேண்டும் என்கிறீர்கள். இப்போது அதேக் குடத்திலிருந்து எனக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். இந்தக் குற்றத்திற்கு உங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?” என்றார்.
அரசனின் கிண்டல் பேச்சு அனைவருக்கும் புரிந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அந்தப் பெண்ணின் கையாலேயே தண்ணீர் பெற்றுக் குடித்தார்கள்.
வெறும் உபதேசங்களால் தீண்டாமை ஒழியாது. தாமே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று செய்ல்பட்ட சத்ரபதி சாகுவின் செயல்பாடு பாராட்டுக்குரியதுதானே?