இராமாயணத்தை எழுதும் முன்பு பெருமாளை வணங்க கம்பர் சென்றார்.
கோயிலுக்குச் செல்லும் பொழுது தேங்காய், பழம் வாங்கிச் செல்வது பக்தர்களின் வழக்கம். கம்பர் பெருமாளுக்கு என்ன காணிக்கை கொடுப்பது என யோசித்தார்.
பணம் கொடுக்கலாம் என்றால் அது பெருமாளிடம் நிறைய இருக்கிறது. செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியையே அவர் நெஞ்சில் தாங்கியுள்ளார். இப்படி ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தார். அனைத்துப் பொருளுமே அவரிடம் இருந்தது.
அவரிடம் இல்லாதது எதுவாக இருக்கும் என்று யோசித்தார்.
“பெருமாளே, என்னிடம் ‘அறியாமை’ என்ற ஒரே ஒரு பொருள் மட்டுமே இருக்கிறது. இதை என்னுடைய காணிக்கையாக எடுத்துக் கொள். எனக்கு நல்ல அறிவைத் தா. நான் இராமாயணத்தை நல்லபடியாக எழுதி முடிக்க வேண்டும்” என்றார்.
அவரின் எண்ணப்படியே கம்பர் இராமாயணத்தை நல்லபடியாக எழுதி முடித்தார்.