மாவீரன் தைமூர் உலகையே நடுங்க வைத்து ஆட்சி செய்து வந்தான்.
ஒருநாள் அவனுடைய அரசவையில் அவன் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட மன்னர்கள் அவனை வணங்கிக் கப்பம் கட்டிச் சென்று கொண்டிருந்தனர்.
தைமூர் அவனுடைய அரசவையிலிருந்த கவிஞர் கெர்மானியுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது தைமூர், “கெர்மானி, என்னை விலைக்கு விற்பதானால், என்ன விலைக்கு விற்பாய்?” என்று கேட்டார்.
கெர்மானிக்கு அவனுடைய மன்னன் தைமூரை விட மன உறுதியும், அஞ்சாத குணமும் இருந்தது.
உடனே கெர்மானி, “மாமன்னனே! தங்களை விற்பதாக இருந்தால் இருபத்தைந்து வெள்ளிக்காசுகளுக்கு விற்பேன்” என்றார்.
இதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான்.
“என்னுடைய இடுப்பில் இருக்கும் இந்தத் தோல் வார் மட்டுமே இருபத்தைந்து வெள்ளிக்காசுகளுக்கு விலை போகுமே! அப்படியிருக்க என்னுடைய விலையே இருபத்தைந்து வெள்ளிக்காசுகள்தான் என்கிறாயே...?” என்று சொல்லிச் சிரித்தான்.
“மன்னனே, தாங்கள் அணிந்திருக்கும் தோல் வாருக்குத்தான் நான் குறிப்பிட்ட விலை இருபத்தைந்து வெள்ளிக்காசுகள். நீங்கள் ஒரு காசு கூட பெற மாட்டீர்கள்” என்றார் அந்தக் கவிஞர்.
மன்னன் தைமூர் கோபப்படவில்லை.
“மாமன்னனாக இருந்தாலும் அவனுடைய உடலின் விலை ஒரு காசுக்குக் கூட பெறாது” என்பதை எளிமையாகச் சொன்ன கவிஞருக்குப் பரிசளித்துப் பாராட்டினான்.