ஒரு ஊரில் ஒரு விவசாயி பண்ணை வைத்து நடத்தி வந்தார்.
ஒரு நாள் அவருடைய கைக்கடிகாரம் தொலைந்து போய்விட்டது. அந்தக் கடிகாரம் அவருக்கு மிகவும் பிடித்தமானது என்பதால், அதைக் காணாமல் மிகவும் கவலைப்பட்டார்.
அங்கிருக்கும் இடமெல்லாம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
பண்ணைக்கு வெளியே பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவருக்கு புதிய யோசனை ஒன்று வந்தது. அங்கிருந்த சிறுவர்களை கூப்பிட்டார். தொலைந்து போன கடிகாரத்தைக் கண்டுபிடித்துத் தருபவருக்குப் பரிசு தருவதாகச் சொன்னார்.
கடிகாரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு என்பதால் சிறுவர்கள் அனைவரும் பண்ணை முழுக்க தேடினார்கள். ஆனால் அவர்களுக்கும் அந்தக் கடிகாரம் கிடைக்கவில்லை.
சோர்ந்து போன அவர் கடிகாரம் அவ்வளவுதான் என்ற மனநிலையில் சிறுவர்களைத் திருப்பி அனுப்பினார்.
வெளியில் சென்ற ஒரு சிறுவன் மட்டும் அங்கு திரும்பி வந்தான். “அய்யா, எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் அந்தக் கைக்கடிகாரத்தைக் கண்டுபிடித்து விட முடியும்” என்றான்.
அந்த விவசாயியும் அதற்குச் சம்மதித்தார்.
அந்தச் சிறுவன் சிறிது நேரத்தில் கடிகாரத்துடன் வந்தான்.
விவசாயிக்கு ஆச்சரியம்! எப்படி இந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டார்.
அய்யா, அப்போது பல சிறுவர்கள் பேசிக் கொண்டே தேடியதால் இந்தக் கடிகாரத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது யாருமில்லை, எந்த சப்தமும் இல்லை. எனவே தரையில் அமர்ந்து கவனமாகக் கேட்டேன். கடிகாரத்தின் டிக் டிக் ஓசை கேட்கும் இடத்தைக் கவனித்து, அங்கு போய் கடிகாரத்தைக் கண்டுபிடித்தேன் என்றான் சிறுவன்.
சிறுவனின் அறிவைப் பாராட்டி அவனுக்குப் பரிசளித்து அனுப்பினார்.