குளிர்ப் பிரதேசம் ஒன்றில் மாற்றுக் கருத்துடைய சிட்டுக்குருவி ஒன்று இருந்தது.
இலையுதிர்க் காலம் முடிவடையும் காலத்தில் மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை நோக்கிப் பறக்க ஆயத்தமாயின.
புரட்சி எண்ணமுடைய சிட்டுக்குருவி மட்டும் அவைகளுடன் செல்லக் கூடாது என்று தீர்மானித்தது.
அது மற்ற குருவிகளிடம், “நான் உங்களுடன் வரவில்லை. நீங்கள் அனைவரும் செல்லுங்கள். நான் இங்கேயே இருந்து சமாளிக்கப் போகிறேன்” என்றது.
குளிர் காலம் வந்து விட்டது.
குளிரின் தாக்கம் அந்த சிட்டுக்குருவியால் தாங்க முடியாத நிலையில் அது கலங்கிப் போய்விட்டது. தானும் இந்தக் குளிரிலிருந்து தப்பிக்க தென் திசை நோக்கிப் பறந்து செல்வோம் என முடிவு செய்தது.
ஆனால் அந்தக் குளிரில் பறந்து செல்வது முடியாது என்பதுடன் தான் மரணமடைவதும் நிச்சயம் என்று தெரிந்ததால் வெளியில் சென்று மரணமடைவதை விட இருக்குமிடத்திலேயே இருப்போம், தான் மரணமடைந்தாலும் பரவாயில்லை என்று அங்கேயே இருந்து விட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதைப் பறக்க விடாமல் செய்துவிட்டது.
மயங்கிய நிலையில் இருந்த அந்தக் குருவி மரத்தில் இருந்து கீழே விழுந்தது.
அப்போது அந்த வழியாகச் சென்ற பசு, அதன் மேல் சாணம் போட்டுவிட்டுச் சென்றது.
குருவிக்கு மூச்சு முட்டினாலும் அந்தச் சாணத்தின் வெப்பம் அதற்கு மிகவும் இதமாய் இருந்தது. இதனால் உற்சாகம் பிறந்து பாட ஆரம்பித்தது.
குருவியின் பாட்டுச் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பூனை ஒன்று, குருவி இருக்கும் இடம் அறிந்து சாணத்தை அகற்றிப் பார்த்து மகிழ்ச்சியோடு குருவியை விழுங்கி விட்டது.
இந்தக் கதையில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?
நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டிற்கு மாறுதலாகவும், தன்னிச்சையாகவும் எடுக்கப்படும் முடிவு நம்மை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பேசாமலாவது இருக்க வேண்டும். இல்லையேல் குருவிக்குப் பூனையால் நேர்ந்த கதிதான்.