ஒரு காட்டிற்குள் இரு நண்பர்கள் சென்றனர்.
அவர்கள் பேசிக் கொண்டே சென்றதால் காட்டின் அடர்ந்த பகுதிக்குச் சென்று விட்டனர்.
அவர்களுக்கு அந்தக் காட்டிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை. அவர்கள் திசை தெரியாமல் எங்கு செல்வதென திகைத்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு ஒரு புலி வந்தது.
"இங்கு எந்தத் திசையும் தெரியவில்லை, ஒரு புலியும் வந்து கொண்டிருக்கிறது. அந்தப் புலியிடமிருந்து எப்படி தப்பிப்பது?'' என்றான் அவர்களில் ஒருவன்.
"இதற்காகக் கவலைப்பட வேண்டாம், கடவுளிடம் நம்மை ஒப்படைத்து விடுவோம். அவர் பார்த்துக் கொள்வார்” என்றான் மற்றவன்.
"நண்பா! இதற்குக் கடவுளை ஏன் வேண்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் கடவுளை அழைக்கும் பழக்கம் நல்லதாகத் தோன்றவில்லை. அவர் நமக்குத் தேவையான அறிவைத் தந்துள்ளார். அதைத்தான் நாம் முதலில் பயன்படுத்த வேண்டும். இதோ, இங்கிருக்கும் மரத்தில் ஏறிப் புலியின் கண்ணில் படாமல் மறைந்து கொள்வோம். அது இந்த இடத்தை விட்டுக் கடந்தவுடன் நாம் வந்த வழியே திரும்பிச் சென்று விடுவோம். காட்டை விட்டு வெளியேறி விடலாம்,'' என்றான் முதலாமவன்.
இரண்டாமவனும் அதைப் புரிந்து கொண்டான்.
"நீ சொல்வது சரி தான்! நாம் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறோமோ, யாரை அதிகம் நம்புகிறோமோ அவர்களுக்கு துன்பம் கொடுக்கக்கூடாது. நீ சொன்னபடியே செய்வோம்'' என்றபடி அருகிலிருந்த மரத்தில் ஏறி மறைந்து கொண்டனர்.
புலி சென்றதும், அவர்கள் அந்தக் காட்டை விட்டு வெளியேறினர்.