கிராமம் ஒன்றில் பொருளாதார அறிஞர் ஒருவர் இருந்தார்.
அவரிடம் பல நாட்டு மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்தத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வர்.
ஒரு நாள் அந்தக் கிராமத் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக, “அய்யா! நீங்கள் பல நாட்டு மன்னர்களுக்குப் பொருளாதாரம் மேம்படுத்தும் ஆலோசனைகளைச் சொல்லும் பெரிய அறிஞராக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மகன் மிகப் பெரிய முட்டாளாக இருக்கிறான். தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? என்று அவனிடம் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.” என்றார்.
அந்தப் பொருளாதார அறிஞர் மிகவும் வருத்தமடைந்தார்.
அவர் தன்னுடைய பையனை அழைத்தார். அவனிடம், “தங்கம், வெள்ளி இவை இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம்?” என்று கேட்டார்.
அவனும் உடனே, “தங்கம்” என்றான்.
“நீ இப்போது சரியாகத்தான் சொல்கிறாய். ஆனால் ஊர்த்தலைவரான இவர் கேட்கும் போது மட்டும் வெள்ளி என்று சொன்னாயாமே?”
என்றார்.
அதைக் கேட்ட அவரது மகன், “ஆமாம், தந்தையே! தினமும் நான் பள்ளி செல்லும் போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு, பொருளாதார அறிஞரின் மகனே, இங்கே வா என அழைத்து, இவ்விரண்டில் அதிக மதிப்புடையதை நீ எடுத்துக் கொள் என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள். கிண்டல் செய்வார்கள். நான் அந்த வெள்ளி நாணயத்துடன் திரும்பி விடுவேன். இது பல மாதங்களாக நடக்கிறது. இதனால் எனக்குத் தினமும் ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று உண்மையைச் சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு முடிந்து போயிருக்கும். எனக்குத் தினமும் வெள்ளி நாணயம் கிடைப்பதும் நின்று போயிருக்கும். எனவே தான்… நான் அவரிடம் வெள்ளி நாணயத்தின் மதிப்பு அதிகம் என்றேன்” என்றான்.
மகனின் புத்திசாலித்தனமான பதிலையும், அவன் தினமும் ஒரு வெள்ளி நாணயத்தைச் சேகரித்து வருவதையும் அறிந்து மகிழ்ந்து போனார்.
தற்போது கிராமத் தலைவர் சிறுவனின் புத்திசாலித்தனத்தை வியப்புடன் நோக்கினார்.