சிங்கத்துக்கு எலி உதவமுடியுமா?
தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிங்கத்தின் மேல் ஒரு எலி விளையாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று விழித்துக் கொண்ட சிங்கம் தன் மேல் விளையாடிக் கொண்டிருந்த எலியைப் பிடித்துத் தின்னப் போயிற்று.
“தூங்கிக் கொண்டிருக்கும் என்னை இடையூறு செய்கிறாயா? இதோ உன்னைத் தின்னப் போகிறேன்” என்று சொல்லிற்று.
இதைக் கேட்டுப் பயந்து போன எலி, “காட்டு அரசே! நான் விளையாட்டுத் தனமாக தங்கள் மேல் ஏறி விளையாடி விட்டேன். இன்று என்னை மன்னித்து உயிருடன் விட்டுவிடுங்கள். நான் என்றும் இந்த நன்றியை மறக்க மாட்டேன்” என்றது.
எலியின் கெஞ்சலில் மனமிரங்கிய சிங்கம் அதை எச்சரித்து உயிருடன் விட்டது.
ஒன்றிரண்டு மாதங்கள் சென்றிருக்கும். ஒரு நாள் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அது சாதாரணமானதாகத் தோன்றவில்லை. சிங்கத்தின் வேதனை கலந்ததாக இருந்தது.
சிங்கத்தின் வேதனை கலந்த கர்ஜனையைக் கேட்ட எலி என்னவென்று அறிந்து கொள்வதற்காக கர்ஜனை கேட்ட திசையை நோக்கிப் போனது.
அங்கு சில வேடர்கள் வலை விரித்து சிங்கத்தைப் பிடித்திருந்தனர். வலையில் மாட்டிக் கொண்ட சிங்கத்தை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்துவிட்டு, அதை அரசனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காக ஒரு வண்டியை எடுத்து வரச் சென்றனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்பு எலி சிங்கத்திடம் சென்று, “அரசே! அன்று எனக்கு உயிர்ப்பிச்சை அளித்த தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுவேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் எலியைப் பார்த்து, “மிகவும் அற்பமான நீ என்னை எப்படிக் காப்பாற்ற முடியும்?” என்று கேட்டது.
உடனே எலி, “அப்படிச் சொல்லாதீர்கள் அரசே! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று சொல்வார்கள். நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்” என்றபடி சிங்கத்தைச் சுற்றியிருந்த வலையைத் தன் பற்களால் கடித்துத் துண்டிக்கத் தொடங்கியது.
சிங்கம் வலையை விட்டு வெளியில் வந்தது.
எலியைப் பார்த்து நன்றி சொன்ன சிங்கம், “எலியே, நான் உன்னைச் சாதாரணமாக நினைத்து விட்டேன். நீ இனி எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வந்து விளையாடலாம்” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தது.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.