கரடி என்ன சொன்னது?
இரண்டு நண்பர்கள் காட்டின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பெரியவன், மற்றொருவன் சிறியவன்.
பெரியவன் சொன்னான், “என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்”
அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது.
உடனே பெரியவன் அங்கிருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்.
சிறியவனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான்.
பின்னர் கீழே விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு செத்தவனைப் போல் படுத்துக் கொண்டான்.
கரடி வந்தது. கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. பிறகு அவன் செத்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.
கரடி போனதும் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தவன், கீழே படுத்திருந்தவனிடம், “கரடி உன் காதில் என்னவோ சொன்னதே... என்ன சொன்னது?” என்று கேட்டான்.
கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.
பின்பு, “ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.