குருநானக் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் கிராமம் ஒன்றில் உபதேசம் செய்து கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து நின்று, அவர் முன் வந்து அவர் பாதங்களில் விழுந்து அழத் தொடங்கினான்.
குருநானக் அவனைத் தூக்கி நிறுத்தி, “யாரப்பா நீ? எதற்காக இப்படி அழுகிறாய்?” என்று கேட்டார்.
உடனே அவன் “என் பெயர் பீகம்” என்றான்.
இந்தப் பெயரைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் பயந்து எழுந்து நின்றனர். ஏனெனில், அந்தப் பகுதியில் மிகப் பெரிய திருடனாக இருந்தவன் பெயர் பீகம். இவன் அந்தத் திருடனாக இருப்பானோ என்று எண்ணினர்.
குருநானக் அவனிடம், “நீ ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.
“நான் பிறரிடம் கொள்ளையடித்துத்தான் என் வாழ்க்கையை நடத்துகிறேன். அதனால்தான் வருத்தப்படுகிறேன்” என்றான்.
“சரி, இன்று முதல் நீ திருடுவது, கொள்ளையடிப்பது போன்றவைகளை விட்டுவிடு” என்றார் குருநானக்.
“அது என்னால் முடியாத செயல். என் வருத்தத்தைப் போக்க வேறு வழி எதாவது சொல்லுங்கள்” என்றான் அவன்.
குருநானக் சிறிது நேரம் யோசித்தார். பிறகு முகமலர்ச்சியுடன் அவனைப் பார்த்து, “நான் சொன்னால், நீ செய்வாயா?” என்று கேட்டார்.
“திருடாதே, கொள்ளையடிக்காதே என்று சொல்வதைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் உங்கள் சொல்லை அப்படியே ஏற்று செயல்படுவேன்” என்றான் அவன்.
“நான் சொல்லப் போவது மிகவும் எளிமையான செயல். நீ தினமும் மாலை, அன்று முழுவதும் என்ன செய்தாய் என்று எழுதி வைத்து, அதை அடுத்த நாள் இந்தக் கூட்டத்தில் படிக்க வேண்டும். இப்படிச் செய்தால் உன் மனதிலுள்ள வருத்தம் மறைந்துவிடும்” என்றார்.
“இவ்வளவுதானா? நான் கூட நீங்கள் ஏதோ கடுமையான செயலைச் செய்யச் சொல்லப்போகிறீர்கள் என்று நினைத்தேன்” என்றான்.
“நீ வழக்கம் போல் திருடுவதோ, கொள்ளையடிப்பதோ எதை வேண்டுமானாலும் செய். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், அதையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டு இங்கு வந்து வாசித்து விட்டுப் போனால் போதுமானது” என்றார்.
“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான் அவன்.
அங்கிருந்தவர்கள், “குருநானக் திருடனைத் திருடாதே என்று சொல்வதை விட்டுவிட்டு திருடு என்று சொன்னதுமில்லாமல், அதை எழுதிக் கொண்டு வந்து இக்கூட்டத்தில் வாசிக்க வேறு சொல்லிவிட்டாரே... இவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை” என்று நினைத்தனர்.
அடுத்த நாள் அந்தத் திருடன் வரவில்லை. தொடர்ந்து சில நாட்களாக அவனைக் காணவில்லை.
ஒருநாள் அவன் அந்தக் கூட்டத்திற்கு வந்தான். குருநானக் காலில் விழுந்த அவன், “சுவாமி, நான் என் திருட்டுத் தொழிலை விட்டு விட்டேன். நீங்கள் சொன்னபடி நான் முதலில் திருடிவிட்டு, அந்தத் திருட்டைப் பற்றி எழுதி வைத்துக் கொண்டேன். ஆனால், நான் எழுதி வைத்ததை இந்தக் கூட்டத்தில் வந்து வாசித்துக் காண்பிக்க என் மனம் சம்மதிக்கவில்லை... இப்படியே சில நாட்கள் கடந்து போ விட்டது. நான் இப்போது என்னுடைய திருட்டையே விட்டுவிட்டேன்” என்றான்.
கூட்டத்தினருக்கு குருநானக்கின் முன் யோசனையுடனான அறிவுரை தற்போது தெரிந்தது.