தொல்லை தந்தவன் திருந்தியது எப்படி?

ஒரு ஊரில் அழகான பூந்தோட்டங்களுடன் அமைந்த வீட்டில் தனது சீடர்களுடன் புத்தத்துறவி ஒருவர் வசித்து வந்தார். அவரைப் பார்ப்பதற்காகத் தினமும் பலரும் வந்து செல்வர்.
துறவியின் பக்கத்து வீட்டில், தன் பிள்ளைகள் மேல் அதிகமான பாசம் வைத்திருக்கும் பக்சேசூரா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். பக்சேசூராவிற்குத் துறவியைச் சிறிதும் பிடிக்காது. அதனால் அவன் துறவிக்கு ஏதாவது தொல்லையைக் கொடுத்துக் கொண்டேயிருந்தான். கழிவுகளைத் துறவியின் வீட்டின் எல்லைக்குள் எறிவது, துறவியை சந்திக்க வருபவர்கள், அவன் வீட்டை கடக்கும் பொழுது அவர்களை ஏதாவது சொல்லித் திட்டுவது, சில சமயம் வீட்டில் இருந்து கல்லெறிவது, துறவியின் சீடர்களைத் தாக்குவது என்று தொல்லையைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
அவனின் தொல்லையைப் பொறுக்க முடியாத துறவியின் சீடர்கள் அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று துறவியைக் கேட்டுக் கொண்டார்கள்.
துறவியும் அவர்களிடம், “சரி, ஏதாவது செய்வோம்” என்று சொல்லி சமாளித்தார்.
துறவியின் வீட்டுத் தோட்டத்தில் அந்தப் பகுதிக் குழந்தைகள் அனைத்தும் வந்து விளையாடிக் கொண்டிருக்கும். பக்சேசூராவின் குழந்தைகளும் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து வந்து விளையாடிக் கொண்டிருக்கும்.
துறவி பக்சேசூராவின் குழந்தைகளை மட்டும் தலையில் நான்கு குட்டுகள் குட்டி, இனிமேல் இந்தப் பக்கம் விளையாட வரக்கூடாது எனச் சொல்லி விரட்டினார்.
இதனால் அவனது குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட முடியாமல் தவித்தன.
தன்னுடைய குழந்தைகள் மட்டும் தனித்து விடப்பட்டதைப் பார்த்த பக்சேசூரா, முதலில் மனந்திருந்தியதை போல் நடித்துத் தனது தொல்லைகளைக் குறைத்துக் கொண்டான். அது நடிப்பு என்று துறவி புரிந்து கொண்டாலும் பக்சேசூராவின் குழந்தைகளைத் தன் வீட்டுத் தோட்டத்தில் விளையாட அனுமதித்தார்.
சில நாட்களில் பக்சேசூராவும் மனம் திருந்தினான். அவனும் அந்தத் துறவியிடம் வந்து அவர் கூறும் நல்ல கருத்துக்களைக் கேட்டுச் செல்லத் தொடங்கினான்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.