உதவி செய்ய மறுக்கலாமா?
அந்தக் காட்டில் வசித்த சிறிய முயல் ஒன்று தனது பெற்றோர் துணையின்றி இரை தேடுவதற்காகத் தன்னிருப்பிடத்தை விட்டு வெளியே வந்தது.
அது ஒரு இடத்தில் மண்ணில் புதைந்திருக்கும் கிழங்கினைக் கண்டது. அந்த முயல் சிறியதாக இருந்ததால், அந்தக் கிழங்கைத் தோண்டி எடுக்க முடியவில்லை.
அந்தக் கிழங்கைத் தோண்டி எடுக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தது.
அருகில் இரண்டு மான்கள் அங்கிருந்த பசும்புற்களை மேய்ந்து கொண்டிருந்தன.
சிறிய முயல் அந்த மான்களிடம் சென்று, தான் சிறு வயதாக இருப்பதால் தனக்கான கிழங்கைத் தோண்டி எடுக்க இயலவில்லை என்றும், அந்தக் கிழங்கை எடுத்துத் தந்து உதவும்படியும் கேட்டது.
அங்கிருந்த மான்களில் ஒன்று, “உனக்குக் கிழங்கை எடுத்துத் தருவதால் எனக்கு என்ன பயன்? என்னால் உனக்குக் கிழங்கை எடுத்துத் தர முடியாது...” என்று மறுத்து விட்டது.
இதைக் கேட்ட முயலுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றது.
முயலின் கவலையைக் கண்ட அதனருகிலிருந்த மற்றொரு மான் முயலை அழைத்துக் கொண்டு அது விரும்பிய கிழங்கு புதைந்திருந்த இடத்தில் தன் கொம்பைக் கொண்டு சிறிது நிலத்தைக் கீறி விட்டது.
தற்போது முயல் எளிதாக அந்தக் கிழங்கை எடுத்துச் சாப்பிட்டது.
அந்த மானுக்கு நன்றி சொன்னது.
இரண்டும் மகிழ்ச்சியுடன் திரும்பியது. இச்சமயத்தில் முயலுக்கு உதவ விரும்பாத மான், வேடன் ஒருவன் விரித்து வைத்த வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட முயலுக்கு உதவிய மான் கவலையடைந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றது.
இதைப் பார்த்த முயல், மான் சிக்கியிருந்த வலையில் சில இடங்களைத் தனது கூர்மையான பற்களால் கடித்து வலையைத் துண்டித்து மானை விடுவித்தது.
வலையிலிருந்து விடுவிக்கப்பட்ட மான் அந்தக் குட்டி முயலுக்குத் தான் உதவ முன் வராததற்கு வருத்தமும் தெரிவித்ததுடன், தன் நன்றியையும் தெரிவித்தது.
ஒருவருக்கொருவர் தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்திட வேண்டும்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.