கழுதைக்குக் கிடைக்குமா மரியாதை?
ஒரு ஊருல ஒரு பெரிய காடு இருந்தது. அருகிலிருந்த கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள் ஒரு கழுதை வழி மாறி வந்தது.
காட்டுக்குள் ஒருவர் மட்டுமே நடக்கக் கூடிய அந்த மண் சாலை வழியாக நடந்து நடந்து அது களைத்தும் போனது. தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்த அந்தக் கழுதை அருகிலிருந்த ஓடைப் பக்கம் போனது.
அந்த ஓடைக்குப் பக்கத்தில் சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காயப் போட்டிருந்தனர்.
இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை எடுத்துத் தன் உடம்பு மேல் போர்த்திக் கொண்டது.
சிங்கம் தோல் போர்த்திக் கொண்ட கழுதையைப் பார்த்த விலங்குகள் அதைச் சிங்கம் என்று நினைத்துப் பயந்து பயந்து ஒதுங்கிப் போகின. விலங்குகள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்த கழுதைக்குக் கர்வம் தலைக்கேறியது.
மனிதர்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து கிராமத்துக்குள் போய் சிங்கம் போல கர்ஜிக்க நினைத்துக் கத்தியது. அதோட குரல் அது கழுதை என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டது.
அதைப் பார்த்த கிராமத்தினர் கழுதையைக் கம்பு கொண்டு அடித்தனர்.
அடி வாங்கிய கழுதையை அதற்குப் பின் யாருமே மதிக்கவுமில்லை. யாரும் அதைப் பார்த்துப் பயப்படவுமில்லை.
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ மதிப்பு கிடைக்காது, அவமானம்தான் வந்து சேரும்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.