அவசரப்படலாமா?
மாலை நேரம். இரு வேடர்கள் பேசிக்கொண்டு போனார்கள்... அதில் ஒருவன் "நாளை நாம் வேட்டைக்கு வரும் போது ஆமையைப் பிடிக்க வேண்டும். காட்டு ஆமைக்கறி சாப்பிட்டு வெகு நாளாயிற்று என என் மனைவி ஆசைப்பட்டுக் கேட்டாள்" என்றான்.
"ஆமாப்பா ஆமைக்கறி சுவையாக இருக்கும். நாம் நாளை ஆமை பிடிப்போம்" என்றான் அவனுடன் வந்தவன்.
இவர்கள் பேச்சைப் புதருக்குள் ஒளிந்திருந்த ஆமை ஒன்று கேட்டது. அதற்கு உயிர் பயம் ஏற்பட்டது. நம்மால் வேகமாக ஓடவும் முடியாது. ஒளிந்து கொண்டாலும் முதுகு ஓடு நம் இருப்பிடத்தைக் காட்டி கொடுத்து விடும். எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் போது நண்பன் கொக்குவின் ஞாபகம் வந்தது. கொக்கு வசிக்கும் மரம் அருகே சென்றது அந்த ஆமை.
மாலை நேரம் என்பதால் கொக்கும் அந்த மரத்துக்குத் திரும்பியிருந்தது.
ஆமை கொக்குவிடம், தன்னுடைய பிரச்சனையை எடுத்துக்கூறி, தன்னை இந்த இடத்திலிருந்து அது மீன்பிடித்துச் சாப்பிடும் குளத்தருகே கொண்டு போய் விடச் சொல்லிக் கேட்டது.
அந்தக் கொக்கு, ஆமையே உன் எடை அதிகமானது. உன்னை நான் எப்படித் தூக்கிச் செல்ல முடியும்? என்று கேட்டது.
அதற்கு ஆமையும் ஒரு யோசனை சொன்னது.
"நண்பனே, நீயும் இன்னொரு கொக்கு நண்பனும் சேர்ந்து ஒரு கனமான நீளக்குச்சியின் இரு முனைகளை ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொள்ளுங்கள் குச்சியின் நடுப்புறத்தை நான் கவ்விக்கொள்கிறேன். அப்படியே போது என்னைத் தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள் இருவரும் சேர்ந்து என்னை தூக்கிக் கொண்டு செல்வது எளிது" என்றது.
இதற்கு அந்தக் கொக்கும் ஒப்புக் கொண்டது.
மறுநாள் ஆமை ஒரு கம்பை எடுத்து வர அதன் இரு முனைகளை இரு கொக்குகள் அலகில் பிடித்துக் கொண்டன. ஆமை நடுவில் கவ்விக் கொண்டது. அவையிரண்டும் சேர்ந்து ஆமையை தூக்கி கொண்டு பறந்தன.
இந்தக் காட்சி வேட்டைக்கு வந்து கொண்டிருந்த அந்த வேடர்கள் கண்ணில் பட அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்!
அட இந்தக் கொக்குகளைப் பாருங்கள்... ஒரு ஆமையையே தூக்கிப் பறக்க கற்றுக் கொண்டன. ஒரு குச்சியை எடுத்து இரு புறமும் கொக்குகள் பிடித்துக் கொள்ள நடுப்புறத்தை ஆமை பிடிக்க இப்படி ஒரு அருமையான யோசனையைக் கொண்ட கொக்குகள் உண்மையில் புத்திசாலிகள்தான் என்றனர்.
வேடர்கள் பேசியது மேலேயிருந்த ஆமையின் காதில் விழுந்தது.
"இந்த யோசனை கொக்குகளுடையதில்லை, இது என்னுடைய யோசனை" என்று அந்த ஆமை வாய் திறக்கக் குச்சியின் பிடியை விட்டது.
சிறிது நேரத்தில் ஆமை அங்கிருந்து கீழே விழுந்து ஓடு சிதறி இறந்தது.
இப்படித்தான் சிலர் தங்களின் பாதுகாப்பறியாமல் அவசரப்பட்டு இழப்புகளைச் சந்திக்கின்றனர்.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.