உணவுப்பொருளை வீணாக்கலாமா?

வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படி அம்மா சொன்னார்.
அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது சிறுமியான நங்கையும் அப்பாவுடன் சென்றாள்.
அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க... அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.
அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின. அம்மா பையை மடித்து வைத்து... அதற்குரிய இடத்தில் வைக்கச் சென்றார்.
அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த சிறுமி நங்கை துடைப்பத்தை எடுத்து அங்கே சிந்திக் கிடந்த அரிசியைக் குப்பையில் தள்ளப் பெருக்கினாள்.
அதைப்பார்த்து வேகமாக ஓடி வந்த அம்மா, அவளிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப் போட்டுவிட்டு அரிசி மணிகளைப் பொறுக்கினாள்.
"அப்பா... அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்... நீங்கள் சில அரிசிகள் சிந்தியதைப் பொறுக்கி எடுக்கிறீர்களே..." என்றாள் நங்கை.
அம்மா, "நங்கை, கடவுள் பூமியில் நம்மை போன்ற பல உயிரினங்களைப் படைத்திருக்கிறார். நம்மைப் போன்று அந்த உயிரினங்களுக்கும் அவர் உணவளித்துக் காப்பாற்ற வேண்டும். நம்மிடமிருந்து இதுபோன்று கீழே விழுந்து விடும் உணவுப்பொருட்களை நாம் பயன்படுத்தா விட்டாலும், பிற உயிரினங்களுக்கு அதைப் பயன்படுத்தலாம். எந்த உணவுப் பொருளையும் சிறிதளவும் வீணாக்கக்கூடாது... கீழே விழுந்த அரிசி நமக்கு வேண்டாமென்றால் அதை எடுத்துப் பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் போடலாம். அவைகளுக்கு அது உணவாகி விடும்" என்றார்.
அம்மா சொன்னது நங்கைக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கு...?
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.